அலோர் ஸ்டார்:

தனது கருத்துக்கள் சில தரப்பினரால் திட்டமிட்டுப் புனைந்து கூறப்படுவதையும், தவறாகச் சித்தரிக்கப்படுவதையும் தவிர்க்கவே அண்மைக்காலமாகச் செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்த்து வருவதாகக் கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமது நோர் விளக்கம் அளித்துள்ளார்.

 

விஸ்மா தருல் அமானில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில காலங்களாகத் தாம் ஊடகங்களைச் சந்திப்பதைத் தவிர்த்ததற்கான காரணத்தைப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

 

“நான் ஒரு விஷயத்தைப் பேசினால், ஒரு சிலர் அதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு அவர்கள் திரிக்கப்பட்ட தகவல்களைப் பரப்பும் போது, மக்கள் மத்தியில் அது பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

 

பின்னர், அவர்கள் ஏற்படுத்திய அந்தக் குழப்பத்தைச் சரிசெய்யவும், உண்மையை விளக்கவும் நான் மீண்டும் ஒருமுறை பேச வேண்டியுள்ளது. இது எனது நேரத்தை வீணடிப்பதுடன், எனது அலுவலகப் பணிகளில் தொய்வை ஏற்படுத்துகிறது,” என்று அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

 

மேலும் அவர் கூறுகையில், “நான் பேசுவதை அப்படியே சொல்வதை விட, அதில் ஒரு பகுதியை மட்டும் வெட்டி எடுத்துச் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்புபவர்கள் அதிகம். இந்தப் புனிதமான ரமலான் மாதத்திலாவது மக்கள் உண்மையைப் பேச வேண்டும். இல்லாத ஒன்றைச் சொல்லி வதந்திகளைப் பரப்புபவர்கள் தேவையற்ற பாவத்தையே சம்பாதிக்கிறார்கள்.

 

எனவே, வீணாகப் பேசி நேரத்தைச் செலவிடுவதை விட, எனது கடமைகளைச் சரியாகச் செய்வதே சிறந்தது என்று முடிவு செய்தேன்,” என்றார்.

 

தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்புபவர்களை ‘அம்பாங் ஜாஜார்’ (Ampang Jajar) வாயைப் போன்றவர்கள் என்று சாடிய அவர், செய்திகளைச் சமூக ஊடகங்களில் பார்ப்பவர்கள் மற்றவர்களின் கருத்துக்களைத் திரிக்காமல் நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.