கோலாலம்பூர், ஜூலை 26-
பாசீர் கூடாங்கில் ஏற்பட்ட காற்றுத் தூய்மைக்கேட்டு பிரச்னைக்கு புறாக்களை பலிகடாவாக்கிய பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தின் போக்கு ஏமாற்றமளிப்பதாக கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் தெரிவித்தார்.
மாநிலத்தில் ஏற்பட்ட காற்றுத் தூய்மைக்கேட்டிற்கான காரணங்களில் ஒன்று புறாக்களின் எச்சமாக இருக்கக்கூடும் என்று ஜோகூர் மாநில அரசாங்கம் கூறியுள்ளது. இந்தக் கூற்றை மக்களால் எள்ளளவும் நம்ப முடியவில்லை என்றார் அவர்.
நம் அன்றாட வாழ்க்கையில் புறாக்கள் மிகச் சாதாரணமான விவகாரமாகும். பல இடங்களில் புறாக்கள் ஒன்று கூடுகின்றன. இவற்றின் எச்சத்தால் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுவதோடு மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு இதுவே காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுவதை தாம் இதுவரை கேள்வியுற்றதில்லை என்று அறிக்கை ஒன்றின் வழி டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.
புறாக்களின் எச்சங்களில் பல கிருமிகள் இருப்பது உண்மைதான். இந்த எச்சங்களுடன் மனிதர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் சுகாதாரக் கேடு ஏற்படலாம் என்று ஆய்வாளர்களும் அறிவியல் நிபுணர்களும் கூறுகின்றனர். ஆனால், அந்த எச்சங்கள் காற்றின் மூலம் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று இதுவரை எவரும் கூறியதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
பாசீர் கூடாங் மக்கள் குறிப்பாக மாணவர்கள் சுகாதார கேட்டை தினசரி எதிர்நோக்கி வருவதால் காற்றுத் தூய்மைக்கேட்டிற்கான காரணத்தை குறிப்பிட்ட கால வரம்புக்குள் அடையாளம் காணும்படி சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடும்படி எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், பருவ நிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் இயோ பீ யின்னை டோமினிக் லாவ் கேட்டுக் கொண்டார்.


