Homeசமூகம்உலக அரங்கில் சாதித்தார் விஷான்!! புகழ்ந்து பாராட்டினார் குலசேகரன்

உலக அரங்கில் சாதித்தார் விஷான்!! புகழ்ந்து பாராட்டினார் குலசேகரன்

அண்மைய காலமாக உலக அரங்கில் மலேசிய இந்தியர்கள் படைத்து வரும் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. அந்த வகையில் உயர் சக்தி கொண்ட ராக்கெட் தயாரிப்பு போட்டியில் சாதித்த விஷான் நாயரரை மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் நேரில் சந்தித்தார்.

இந்திய சமுதாயத்திற்கு பெருமையை ஈட்டித் தந்த சாதனையாளர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் இங்கிலாந்து ஷஃபில்ட் பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு இயந்திர பொறியியல் துறை மாணவரான விஷான் நாயர் பிரகாசன். உயர் சக்தி கொண்ட ராக்கெட் தயாரிப்பு போட்டியில் விஷான் தலைமையேற்ற குழு அப்போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கும் அதிகமான குழுக்களை தோற்கடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

விஷான் தலைமையிலான குழு தயாரித்த நோவா வடிவிலான ராக்கெட் 11.56 கிலோமீட்டர் தூரத்தை எட்டி விண்வெளி துறையில் பதிவு செய்யப்பட்ட முந்தைய தூரத்தை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. மலேசியாவைப் பிரதிநிதித்து ஒரே இந்திய மாணவரான விஷானின் வெற்றியை பாராட்டி பெருமை கொண்டார் அமைச்சர் எம் குலசேகரன்.

அமெரிக்கா நியூ மெக்சிகோவில் நடைபெற்ற உலகில் மிகப்பெரிய ராக்கெட் பொறியியல் போட்டியில் 24 வயது விஷான் உட்பட 7 பேர் அடங்கிய குழு கலந்து கொண்டது. அப்போட்டிக்கு முன்னதாக பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று சிறந்த ஏழு பேரில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விண்வெளி பொறியியல் துறையில் மலேசியா தனி முத்திரையை பதிக்க தன்னால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அமைச்சரிடம் கூறினார். அதற்காக இதுவரை தாம் பெற்றுள்ள அனுபவங்களை மலேசிய மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் மிகுந்த ஆவலுடன் உள்ளார் என்பதையும் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு வாக்கில் 30.48 கிலோமீட்டர் தூரம் பாயக்கூடிய ராக்கெட்டை தயாரித்து பாய்ச்ச வேண்டும் என்ற விஷானின் லட்சியத்தை அமைச்சர் எம் குலசேகரன் பாராட்டி மகிழ்ந்து அவருக்கு தேவையான எதிர்கால திட்டங்களை அமைத்துக் கொடுப்பதாக கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more