கோலாலம்பூர் ஆக 8-
வயது குறைந்த பிள்ளைகளின் ஒருதலைப்பட்சமான மதமாற்றத்திற்கு அனுமதிக்கும் நோக்கத்தைக் கொண்ட எந்த ஒரு சட்டத்தையும் சிலாங்கூர் ஜ.செ.க ஆதரிக்காது. சிலாங்கூர் மாநில ஜ.செ.க தலைவர் கோபிந்த் சிங் டியோ இதனை தெரிவித்தார்.
வயது குறைந்த பிள்ளைகளின் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை தடுக்கும் மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சு லிம் அவர்களின் முடிவை சிலாங்கூர் ஜனநாயக செயல் கட்சி ஆதரிக்கும் என்றும் அவர் சொன்னார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சிலாங்கூரில் ஒருதலைப்பட்சமான மதமாற்றத்தை அனுமதிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தும் எந்த ஒரு முயற்சிக்கும் ஜ.செ.க.அனுமதிக்காது என கோபிந்த் சிங் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் பெற்றோர் என்பது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் உள்ளடக்கியிருப்பதை இந்திரா காந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பதை கோபிந்த் சிங் சுட்டிக்காட்டினார். எனவே வயது குறைந்த தங்களது பிள்ளைகளின் சமயம் மீதான முடிவை செய்வதில் பெற்றோர் இருவருக்கும் உரிமை இருப்பதை கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக வலியுறுத்தப்பட்டதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டமே உயர்வானதாகும்.எனவே அதற்கு எதிரான எந்த ஒரு சட்டமும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும் நல்லது முரண்பாடான ஒன்று என அவர் சொன்னார்.
மாநில சட்டமன்ற சபாநாயகர் என்ற முறையில் சட்டமன்ற விதிகளை இங் மீறவில்லை.
நிரந்தர விதிகளுக்கு ஏற்பவே சட்டமன்ற கூட்டத்தை அவர் ஒத்திவைத்துள்ளார் என்று தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சருமான கோபிந்த் சிங் தெரிவித்தார்.


