பார்சிலோனா, ஆக.29 –
பார்சிலோனா கால்பந்து கிளப் அணி, தங்களது அதிக சாதனைத் தொகையாக 145 மில்லியன் யூரோ கொடுத்து ஜெர்மனி கால்பந்து கிளப்பான பொருசியா டார்ட்மண்ட் அணியில் விளையாடும் பிரான்ஸ் வீரர் ஒஸ்மான் டெம்பெலேவை விலைக்கு வாங்கியுள்ளது.
முதலில் 105 மில்லியன் யூரோ கொடுக்க பார்சிலோனா முன்வந்தது. இதை பொருசியா டார்ட்மண்ட் ஏற்கவில்லை. இந்நிலையில் 145 மில்லியன் யூரோ கொடுக்க பார்சிலோனா முன்வந்தது. இதற்கு பொருசியா டார்ட்மண்ட் சம்மதம் தெரிவித்தது.
இதனால் ஒஸ்மான் பார்சிலோனா அணிக்கு வருவது உறுதியானது. நேற்று பார்சிலோனா வந்த ஒஸ்மானுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர் இன்று அதிகாரப்பூர்வமான ஒப்பந்தத்தில் ஒஸ்மான் கையெழுத்திட்டார்.
பார்சிலோனா கிளப் தனது வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பணம் கொடுத்து ஒரு வீரரை வாங்குவது இதுதான் முதன்முறை. இதற்கு முன் 2014-ல் சுவாரஸை லிவர்பூலில் இருந்து 80 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியதுதான் அதிகப்படியாக இருந்தது.
பார்சிலோனா அணியுடன் ஒப்பந்தம் செய்தது குறித்து ஒஸ்மான் டெம்பெல் கூறுகையில் ‘‘உலகின் தலைசிறந்த அணியில் இணைவதன் மூலம் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த கிளப்பில் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். பார்சிலோனா அதிக அளவில் டிராபி மற்றும் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று நம்புகிறேன். பார்சிலோனா மைதானத்தில் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
பார்சிலோனா அணியில் நெய்மர் 11 ஆவது நம்பர் ஜெர்சியுடன் விளையாடினார். இந்த 11 ஆம் எண் கொண்ட ஜேர்சி ஒஸ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.


