சுங்கை சிப்புட் நவ. 9-
கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மலேசிய இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக மலேசிய இந்தியக் காங்கிரஸ் (மஇகா) தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிறப்பு மானியம் இல்லை என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக ஆஸ்ட்ரோ செய்திகளிடம் தமது ஆதங்கத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
இக்கால சூழ்நிலையிலும் தமிழ்ப்பள்ளிகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. 2010ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு வரையிலான வரவு செலவு திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிறப்பு மானியம் ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை.

அதன் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமுதாயம் ஓரங்கட்டப்பட்டு விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் மனு ஒன்று வழங்கப்படும் என்றார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். அது மேம்பாட்டிற்கும் தமிழ்ப்பள்ளிகளின் தொடர் வளர்ச்சிக்கும் துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மது சிகரெட் உட்பட இதர பொருட்களுக்கு வசூலிக்கப்படும் வரி சீன மற்றும் இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்படும் என்றார் அவர். முன்னதாக சுங்கை சுப்புட்டில் வசதி குறைந்த 25 மாணவர்களுக்கு தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் இலவசமாக மடிக்கணினிகளை வழங்கினார். இதுவரையில் இந்த திட்டத்தின் மூலம் 100க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள்.


