கோலாலம்பூர், நவம்பர் 27:-
இந்தியத் தொழில்முனைவர்களின் வணிகத்தை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு மலேசிய இந்திய தொழிலியல் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பும் ஹலால் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து இலவசமாக ஹலால் பயிற்சியையும் வழிகாட்டலையும் வழங்கவிருக்கிறார்கள்.
இந்திய வணிகர்கள் தங்களின் வியாபாரத்தைக் குறிப்பிட்டு இந்திய வாடிக்கையாளர்களோடுதான் தொடர்ந்து வரும் நிலையை மாற்றி அனைத்து இனத்தவரும் இந்திய வணிகர்களின் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும். தங்களின் சந்தையை விரிவு படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம். ஆகவே தான் இந்த ஹலால் வழிகாட்டலையும் பயிற்சியையும் இந்தியத் தொழில்முனைவர்களிடம் கொண்டு சேர்க்க தற்சமயம் ஏற்பாடு செய்திருப்பதாக மலேசிய இந்திய தொழிலியல் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹலால் என்பது இஸ்லாமிய அங்கீகாரச் சான்றிதழ் மட்டும் இல்லை. உற்பத்தியின் மூலப்பொருள் முதல் முடிக்கப்பட்ட தயாரிப்பு வரையிலான அனைத்து செயல்முறைகளும் இஸ்லாமிய தேவைகள் இருப்பதை உறுதி செய்வதோடு இல்லாமல் வாங்கப்படும் ஒரு பொருள் பயனீட்டாளர் தேவைகளுக்கு இணங்கி இருப்பதையும் உறுதி செய்யும் தரச் சான்றிதழும் ஆகும்.
இந்தச் சான்றிதழின் தேவை தற்சமயம் உலகளாவிய நிலையில் வளர்ந்திருப்பதைச் சுட்டிகாட்டிய அவர், இந்தியத் தொழில்முனைவர்களின் சந்தை விரிவடைய பெறும் உதவியாக இது இருக்கும் என்பதையும் தெளிவு படுத்தினார். சுமார் 12 மாதங்கள் இந்த வழிகாட்டல் – பயிற்சியை ஹலால் மேம்பாட்டு நிறுவனம் வழங்கவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

“சிறு – நடுத்தர வணிகர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஹலால் சான்றிதழைக் கொண்டிருக்கும் என்பதல்ல. இனப்பாகுபாட்டைக் கடந்து தொழிலை விருத்தி செய்ய நினைக்கும் அனைவரும் இந்த ஹலால் சான்றிதழைக் கொண்டிருப்பது முக்கியம்.”
– டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்
மலேசிய இந்திய தொழிலியல் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர்

“உணவு சார்ந்த துறைகளைத் தாண்டி பல இதரத் துறைகளுக்கும் இந்த ஹலால் சான்று உதவுகிறது. மருந்தியல், போக்குவரத்து, தங்கும் விடுதி உட்பட பெரும்பான்மை துறைகளில் ஹலால் சான்றிதழ் தனது பங்கை வகிக்கின்றது”
என டத்தோ ஷேட் ஜமாருல்கான் கடீர் தெரிவித்தார்.

உள்ளூர் வணிகத்தைத் தாண்டி உலக வணிகத்துக்கும் இந்த ஹலால் சான்றிதழ் பயனளிக்கிறது. இந்த ஹலால் மேம்பாட்டு நிறுவனம் வழி கிடைக்கப்பெறும் ஹலால் சான்றிதழ் உலகத் தர அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று . மேலும், ஹலால் சான்றிதழ் பெறுவது மட்டும் அல்லாமல் அதனை நம்மவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தக்க வைத்துக் கொள்ளவும் தொடர்ந்து முயல வேண்டும்.
என மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திரு முத்துசாமி கூறினார்.
ஆகவே, இந்தியத் தொழில் முனைவர்கள் இந்திய அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பயிற்சி – வழிகாட்டல் குறித்த மேல் விவரங்கள் அறீய மைக்கியைத் தொடர்புகொள்ளலாம் என டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் கூறினார்.
மைக்கி தொடர்ர்பு எண் : 0174745509


