கோலாலம்பூர் | ஜூன் 16:-
மலேசியா உட்பட இந்தோனேசியா, பிலுப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஆஸ்ட்ராஸெனாக்கா தடுப்பூசியை ஜப்பான் வழங்கவுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மோத்தேகி தோஷிமிட்சு கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கிய மலேசியாவில் இருக்கும் ஜப்பான் நாட்டு தூதரகம், ஜூலை மாதம் தொடங்கி ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்தத் தடுப்பூசியை அனுப்ப இருப்பதாகவும் நிலைமை சாதகமாக இருந்தால் அதனை உடனடியாக ஒருங்கிணைத்து விநியோகிப்பதாக மோத்தேகி தோஷிமிட்சு கூறினார்.
மலேசிய மக்களுக்குத் தடுப்பூசியை வழங்க ஜப்பான் மலேசிய நாட்டுடன் ஒத்துழைக்க இருப்பதாக மோத்தேகி தோஷிமிட்சு கூறினார்.
இது மலேசியா – ஜப்பான் நாடுகளுக்கிடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என மேலும் சொன்னார்.
கடந்த சனவரி மாதம் மலேசியாவில் கோவிஉட்-19 பெருந்த்ற்றை சமாளிக்க ஏறத்தாழ 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மருத்துவப் பொருட்களையும் கருவிகளையும் ஜப்பான் வழங்கி உதவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மலேசியாவுக்கு அந்நாடு ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல உதவிநிதி, ஐ.நா. அகதிகள் நல வாழ்வு உயர் ஆணையம், மலேசிய செம்பிறை – செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ஏறத்தாழ 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியையும் உதவியாக வழங்கி இருந்தது.


