Homeமலேசியாவளமிக்க சமுதாயமாக உருமாற ஒற்றுமைக்கும், சிந்தனை மறுமலர்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பீர் ! - டாக்டர் நெல்சன்...

வளமிக்க சமுதாயமாக உருமாற ஒற்றுமைக்கும், சிந்தனை மறுமலர்ச்சிக்கும் முன்னுரிமை அளிப்பீர் ! – டாக்டர் நெல்சன் முருகன் வலியுறுத்து

கோலாலம்பூர் | 30/7/2021 :-

இந்நாட்டில் நமது எதிர்காலத்திற்காகவும் நமது பிள்ளைகளின் நலனுக்காகவும் ஒற்றுமையோடு இருப்பதோடு  சிந்தனை மறுமலர்ச்சி பெற்றிருப்பதும் மிக முக்கியம் என்கிறார் நமது மலேசிய இந்திய கழகத்தின் தோற்றுனரான டாக்டர் நெல்சன் முருகன்.

கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் பிற இனத்தவர்களுக்கு :ஈடாக நாமும் முன்னேற்றப் படிகளில் தடம் பதிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒற்றுமையுடன் கூடிய  சிந்தனை மறுமலர்ச்சி இன்றியமையாதது என்றார் அவர்.

“இந்தியர்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் காணப்பட வேண்டும். மற்ற இனங்களுக்கு இணையாக பல்கலைக்கழகத்தில் இடம், அரசு துறைகளில் உயர் பதவிகள் உட்பட அனைத்து சலுகைகளும் பெறுவதற்கு நமக்கு உரிமை உள்ளது. எனினும், இவற்றை ஒற்றுமையின் மூலம்தான் நாம் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன் வைப்பதற்கு நமக்கு ஒருமித்த குரல் தேவைப்படுகிறது. இதுவே  நமது மலேசிய இந்திய கழகம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கம்” என்றார்.

தற்போது இக்கழகத்தில் 5,600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மூன்று அல்லது நான்கு லட்சம் பேர் அங்கத்தினர்களாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அப்போதுதான் இக்கழகத்தின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கும். பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்கள் இந்தியர்களே. இத்தகு வலிமையைப் பெற்றிருக்கும் நாம் ஒன்றுபட்டால் கழகத்தின் திட்டங்கள் செயல்வடிவம் காண்பது  நிச்சயம்.

தகுதி பெற்ற மாணவர்கள் உபகாரச் சம்பளத்துடன் மேற்கல்வி தொடரவும், தோல்வியடைந்த மாணவர்கள் தொழிற் திறன் பயிற்சியைப் பெறவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு கல்வியே திறவுகோள் என்பதால் உயர் கல்வி கூடங்களில் இந்தியர்களுக்கு சரிசம வாய்ப்புகள் வழங்கப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

“ இதன் பொருட்டு நமது சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு  ஒன்று திரளும்படி அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். இக்கழகத்தில் சேர்ந்து இந்தியர்களின் நலனுக்காகப் போராடத் தயாராக இருப்பதாக பலர் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று முகநூல் வழி ஆற்றிய உரையில் அவர் விவரித்தார்.

“நாம்  சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கண்மூடித்தனமாகச் செயல்படுவதை விடுத்து ஆக்ககரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்”.

அகதிகள் போல் வாழும் நிலை மாற வேண்டும். அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்பதற்காக மதம் மாறும் போக்கு கைவிடப்பட வேண்டும். இதுபோன்ற பலவீனங்கள் களையப்பட்டு பலமிக்க சமுதாயமாக உருவெடுக்கும் கழகத்தின் முயற்சிகளுக்குத் தோள் கொடுக்க வாரீர் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றார் நெல்சன்.

spot_img

latest articles

explore more