பெட்டாலிங் ஜெயா | 5/1/2022 ;-
பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிச் சிற்றுண்டிச் சாலை நடத்துநர்கள் நிதிச் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் வேளையில், பள்ளி நிர்வாகம் அவர்களிடத்தில் வாடகையைக் கேட்டிருப்பது குறித்து மலேசிய பள்ளிச் சிற்றுண்டிச் சாலை நடத்துநர்கள் சங்கம் Persatuan Pengusaha Kantin Sekolah Malaysia (PPKSM) கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து கருத்துரைத்த அச்சங்கத்தின் தலைவர் ஹம்ஸா ஓமார், எறத்தாழ 2 ஆண்டுகள் வியாபாரம் செய்யாமல் முடங்கி சிக்கலை எதிர்கொண்டிருக்கும் பள்ளிச் சிற்றுண்டிச் சாலை நடத்துநர்களுக்கு வாடகையைச் செலுத்துவதில் இருந்து ஆறு மாத காலம் ஒத்திவைக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது மகிழ்ச்சியைத் தந்தாலும், மீண்டும் வியாபாரத்தைத் தொடங்க சிற்றுண்டிச் சாலை நடத்துநர்களுக்கு மூலதனம் இல்லாத நிலையில் கடன் பெறுவதிலும் சிக்கல் உள்ளது, முந்தையக் கடனையும் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
வியாபாரத்தைத் தொடங்கவே மூலதனம் இல்லாத நிலையில் சனவரி மாத வாடகையை சனவரி 7 ஆம் நாளுக்குள் செலுத்தி விட வேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. அதனைத் தாமதப்படுத்தக் கூடாது எனவும் அது கணக்கறிக்கை பரிசோதனைக்கும் தணிக்கைக்கும் எதிராகி விடும் எனவும் கூறுகின்றன.
வியாபாரம் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்த போது, பள்ளிச் சிற்றுண்டிச் ஆலை நடத்துநர்கள் வாடகைப் பணத்தைச் செலுத்தத் தாமதித்ததில்லை. ஆனால், இப்போதையச் சூழலில் மாதம் ரிம 3,000 அல்லது ரிம 4,000 செலுத்துவது முடியாதக் காரியமாகும்.
ஆறு மாதங்களுக்கு சிற்றுண்டிச் சாலைகளின் வாடகையைச் செலுத்த விலக்கு வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை எனவும் ஹம்ஸா ஓமார் தெரிவித்தார்.
கோவிட்-19 காரணமாக, பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில், சிற்றுண்டிச் சாலை நடத்துநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிச் சிற்றுண்டிச் சாலை நடத்துநர்களோடு பல துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில வணிகங்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, கூடுதல் உணவுத் திட்டமான RMT க்கான மானியமும் அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் எனவும் PPKSM கோரிக்கை முன்வைத்துள்ளது.
தற்போதையக் கணக்கின்படி, சோறு, கோழிக்கறி, மைலோ ஆகியவற்றுக்கு ரிம 2.50 மானியம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், PPKSM ரிம 4.00 ஆக அதிகரிக்கக் கோரியுள்ளது.
ஆனால், அது அதிகரிக்கப்படவில்லை. ஆனால், RMT திட்டத்தில் உள்ள பாலுக்கு ரிம 1.50 மானியம் வழங்கப்படுவதாகக் கூறியது.
இதற்கு முன்னர், ரிம 1.45க்குக் கிடைக்கும் பாலை சிற்றுண்டிச் சாலையில் ரிம 1.50 ஆக விற்கப்பட்டு அதனை சிற்றுண்டிச் சாலை நடத்துகிறவர்களுக்கு 5 சென் மட்டுமே இலாபம் கிடைக்கும். ஆனால், அது இதர செலவுகளுக்குக் கட்டுப்படாது.
மேலும், பால் வாங்க போடப்பட்ட மூல நிதி ஒரு மாதம் கழித்தே திரும்பக் கிடைக்கும் நிலையில் உள்ளது.
எனவே, அரசாங்கம் தங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு முன் வைத்துள்ளக் கோரிக்கைகளை நிறைவேற்றும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக ஹம்ஸா ஓமார் சொன்னார்.


