ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டுதோறும் “தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டத்தின் கீழ் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து வருகிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மரபுக்கவிதை, புதுக்கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை எனச் சுழல்முறையில் குறிப்பிட்ட ஓர் இலக்கிய வகையிலிருந்து சிறந்த நூலொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நூலின் ஆசிரியர் கௌரவிக்கப்பட்டு வருவது மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் அறிந்த ஒன்று.
அவ்வகையில் இவ்வாண்டு சிறந்த மரபுக்கவிதை நூலொன்றைத் தேர்ந்தெடுப்பதற்கானத் திட்டத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஈடுபட்டு வருகின்றது .
கடந்த 2017, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ள மரபுக்கவிதை நூல்களை அனுப்பி வைக்க எழுத்தாளப் பெருமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஒரு நூலுக்கு மலேசிய ரிங்கிட் 7 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். அடுத்த நிலையில் தேர்வு செய்யப்படும் மேலும் சிறந்த நான்கு நூல்களுக்குத் தலா 500 ரிங்கிட் ஊக்குவிப்புப் பரிசாக வழங்கப்படும்.
இவ்வாண்டு மரபுக்கவிதை நூல்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை ஜூன் மாதம் 25ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு எழுத்தாளர் சங்கத் தலைவர் ஞானசைமன் கேட்டுக் கொண்டார்.
தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டத்திற்கான விதிமுறைகள் :
இப்பரிசுத் திட்டத்தில் பங்குகொள்ளும் எழுத்தாளர்கள் மலேசியக் குடிமக்களாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர்கள் தங்களுடைய மலேசிய அடையாள அட்டை நகலொன்றையும் நூல்களோடு அனுப்பி வைத்தல் வேண்டும்.
2017, 2018, 2019, 2020, 2021, ஆகிய ஐந்து ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட நூல்களை மட்டுமே இவ்வாண்டுக்கான பரிசுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.
அச்சில் வெளிவந்த நூல் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும். கையெழுத்துப் படிவமும் பிறவும் கண்டிப்பாக ஏற்கப்படாது.
2017-2021 ஆண்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி நூல் வடிவில் வெளியிட்டுள்ளோர், தாம் எழுதிய நூல்கள் அத்தனையையும் அனுப்பி வைக்கலாம்.
பதிப்பிக்கப்பட்ட ஆண்டு நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். மேலும், முதற்பதிப்பாக வெளிவந்தவை மட்டுமே ஏற்கப்படும். மேற்குறித்த ஆண்டுகளில் முதற்பதிப்பாக இல்லாமல், மறுபதிப்புகள் ஏற்கப்படாது.
போட்டிக்கு அனுப்பும் தங்களுடைய நூல்களில் ஐந்து படிகளை அனுப்பி வைத்தல் வேண்டும். அவற்றைக் கண்டிப்பாக ஒரே தடவையில் மொத்தமாக அனுப்புதல் வேண்டும்.
தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்டத்தில் ஓர் எழுத்தாளர் ஏற்கனவே இரண்டு முறை பரிசு பெற்றிருந்தால் அவர் மீண்டும் போட்டியில் பங்கு பெற முடியாது. (ஒருவர் இருமுறை மட்டுமே போட்டியில் பங்கு பெற முடியும்.)
எழுத்தாளர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய சுருக்கக் குறிப்பு ஒன்றையும் (Biodata) தயார் செய்து நூல்களோடு இணைத்து அனுப்புதல் வேண்டும். அக்குறிப்பில் தொடர்பு முகவரி, கைப்பேசி, வீட்டுத் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தங்களின் எழுத்து அனுபவம், ஏற்கெனவே வெளியிட்டுள்ள நூல்கள் போன்ற விவரங்கள் தெளிவாக அடங்கியிருத்தல் வேண்டும்.
25.6.2022ஆம் தேதிக்குள் நூல்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அதற்கு பிறகு அனுப்பி வைக்கப்படும் நூல்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படாது என்பதைனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நூல்கள்அனுப்ப வேண்டிய முகவரி:
திரு. மன்னர் மன்னன்
NO. 10, JALAN 4/41, 46050 PETALING JAYA,
SELANGOR.
மேல் விவரம் பெற 013-3417389 (மன்னர் மன்னன்), 019-2249844 (ஞானசைமன்), 0177008189 ( மோகனன்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


