செமினி, ஜூலை 9-
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ்வின் பெரும் முயற்சியின் பலனாக இங்குள்ள ஜாலான் பாங்கி, தாமான் பத்து தீகாவைச் சேர்ந்த (முன்னாள் டுனடியன் தோட்டம்) 22 குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு நிலப்பட்டாக்கள் பெற்றுத் தரப்பட்டன.
இக்குடியிருப்பாளர்கள் வீடுகளுக்கு நிலப்பட்டா, ஆலய நிலப் பிரச்னை, கழிவு நீர் தொட்டி பிரச்சினை, கால்வாய் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த மாதம் மேம்பாட்டாளர், காஜாங் நகராண்மைக் கழக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கணபதி ராவ் பேச்சு நடத்தினார்.
மலேசிய சோசிலிச கட்சியின் (பிஎஸ்எம்) போராட்டத்தின் பலனாக இந்த வீடுகள் இத்தோட்டப் பாட்டாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. எனினும், இவை நிரந்தர குடியிருப்பு சான்றிதழ்களைக் கொண்டிருக்கவில்லை.
மேற்கண்ட விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் தலைமையில் தொடர் பேச்சு வார்த்தை காஜாங் நகராண்மைக் கழக தலைவர் ஹாஜி நஜ்முடின் ஜெமாய்ன், நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராமச்சந்திரன், தியாகராஜன், பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருள், மேம்பாட்டு நிறுவனமான இஞ்ச் கெனெட்டின் திட்ட நிர்வாகி ரிடுவான் முகமது, நில அலுவலகம் , உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளின் பொறுப்பாளர்களுடன் காஜாங் நகராண்மைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராமச்சந்திரன், தியாகராஜன், பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருள், உலு லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் ராஜன் முனுசாமி, ஆலய மற்றும் குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகளான கே,வாசுதேவன், எல்.ஜெயபாலன்,ஏ.ரவி,எல்.ஜெயகுமார், ஏ.லோரன்ஸ், மற்றும் கே.ராஜசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்புகளின் பலனாக இக்குடியிருப்பாளர்களுக்கு தனித்தனி நிலப்பட்டா தயாராகி வருவதாகவும் அதற்கு முன்பு தற்போது நகல் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது. மழைக் காலங்களில் கால்வாய்களில் நீர் நிரம்பி வழிவதால் வெள்ளம் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று கணபதி ராவ் இச்சந்திப்பின்போது இஞ்ச் கெனெட் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டார். அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், ஆலய நில விவகாரத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடுகளுக்கான நிலப்பட்டா விவகாரம், கழிவு நீர் தொட்டி பிரச்சினை, கால்வாய் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன், நடேசன், ராஜன் முனுசாமி ஆகியோர் இவற்றை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ்வின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதனிடையே, தங்கள் குடியிருப்பு பிரச்னைகள் அனைத்திற்கும் சுமூகமான முறையில் தீர்வு காண உதவிய கணபதி ராவ், காஜாங் நகராண்மைக் கழகம், பிகேஆர், பிஎஸ்எம் உட்பட அனைத்து தரப்புகளுக்கும் குடியிருப்பாளர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.


