காஜாங், அக். 19
இங்குள்ள கம்போங் சுங்கை கந்தான் கால்வாய் மேம்படுத்தப்பட்டதன் வழி கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவி வந்த வெள்ளப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இதற்கு முன்பு குப்பைக் கூளங்களால் கால்வாய் அடைக்கப்பட்டிருந்ததால் மழைக்காலங்களில் நீர் வழிந்து நிரம்பி இப்பகுதி வெள்ளக்காடாக மாறிவிடும் என்று காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் தெரிவித்தார்.
இதன் காரணமாக அருகிலுள்ள 12 வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்ததை 2 லட்சத்து 56 ஆயிரம் வெள்ளி செலவில் மேம்படுத்தப்பட்ட கால்வாயை நேரில் சென்று கண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மழைக் காலங்களில் கால்வாய் நீர் வழிந்து நிரம்பி அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்விவகாரம் குறித்து கடந்தாண்டு சுங்கை கந்தாங் குடியிருப்பாளர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பொதுப்பணி துறை இங்குள்ள கால்வாயை மேம்படுத்தும் பணியைத் தொடங்கியதாக லோய் சியான் தெரிவித்தார்.
220 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் சீரமைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,இனி மழைக்காலங்களில் இங்குள்ள மக்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கம்போங் சுங்கை கந்தான் கிராமத் தலைவர் ரசிஃப், பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, வறுமையில் வாழும் மக்களுக்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாதந்தோறும் 300 வெள்ளி மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கி வருகிறது.இதனையடுத்து பெடுலி செஹாட், வணிகர்களுக்கு ஹிஜ்ரா கடனுதவி, சித்தம் வழி வணிகர்களுக்குத் தேவையான சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வருகிறது.
மக்கள் நலன் மீது மாநில அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறையையே இது பிரதிபலிக்கிறது. மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபடும் அரசாங்கம் மற்றும் கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கும்படி மாநில மக்களை லோய் சியான் கேட்டுக் கொண்டார்.


