கோலாலம்பூர், அக்.13-
இந்திய சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக 2024 மடானி வரவு செலவு திட்டத்தில் மலேசிய இந்திய சமூக உருமாற்றுப் பிரிவுக்கு (மித்ரா) .100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி பி 40 மற்றும் எம் 40 பிரிவினரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வியூக திட்டங்கள் வாயிலாக பயனான வழியில் செலவழிக்கப்படுவதைத் தாம் உறுதிப்படுத்தப் போவதாக மித்ரா சிறப்பு செயற்குழு தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
“2024 வரவு செலவு திட்டத்தில் மித்ராவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி இந்திய சமூக மேம்பாட்டில் கூடுதல்பட்ச தாக்கத்தை ஏற்டுத்துவதை உறுதிப்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன்” என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டார்.
393.8 பில்லியன் வெள்ளி என மிகப்பெரிய தொகையை உட்படுத்தியிருக்கும் இந்த இரண்டாவது மடானி பட்ஜெட்டை மித்ரா வரவேற்பதாகக் குறிப்பிட்ட ரமணன், நாடு மற்றும் மக்களின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்துவதில் ஒற்றுமை அரசாங்கம் கொண்ட கடப்பாட்டையே இது காட்டுகிறது என்றார்.




