கோலாலம்பூர்,அக்.16-
பினாங்கு மாநில ரசிகர்களுக்கு இசை விருந்தைப் படைக்கவிருக்கிறார் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன்.
வரும் டிசம்பர் 16 ஆம் தேதி பினாங்கு ஸ்பாய்ஸ் அரேனாவில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி, ஸ்ரீ நிஷா ஆகியோருடன் உள்நாட்டு கலைஞரான பிக்போஸ் புகழ் முகேன் ராவ்வும் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த இசை நிகழ்ச்சியை மிகச் சிறப்பான முறையில் தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் டிசம்பர் மாதம் விடுமுறை காலம் என்பதால் அதிகமானோர் பினாங்கு மாநிலத்திற்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ‘ஹெலோ கிரியேட்டிவ் ‘ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவமணி நம்பிக்கை தெரிவித்தார்.
அதே வேளையில், குடும்பத்தோடு வரும் ரசிகர்களுக்கு சிறப்பு குடும்ப சலுகை திட்டம் காத்திருப்பதாகவும் தலைநகர், ஸ்ரீ பசிபிக் தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.
இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பாடகர் ஹரிஹரன் கலந்து கொள்ள இயலவில்லை. எனினும், மும்பையிலிருந்து இணையம் மூலம் தொடர்பு கொண்டு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மிகச் சிறந்த பாடல்களை ரசிக்கும் மலேசிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவையும் அளிக்கும் ஓர் அற்புத நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கும் என்று இச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட மலேசிய மண்ணின் மைந்தனான முகேன் ராவ் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மிகச் சிறந்த பாடல்களைத் தான் வழங்கவிருப்பதாகக் குறிப்பிட்ட முகேன் ராவ், இதில் ஹரிஹரனின் மகன் கலந்து கொள்ளவிருக்கும் தகவலையும் வெளியிட்டார்.
Tickets2U.Com.My வழி இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை இப்போது முதல் ரசிகர்கள் வாங்கத் தொடங்கலாம்.
இச்செய்தியாளர் கூட்டத்தை கவிமாறன் மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.
கலந்து கொண்ட ஊடகவியாளரகள் அனைவருக்கும் ‘ஹெலோ கிரியேட்டிவ் ‘ சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. சுவைமிகு மதிய உணவோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.




