spot_img
11.7 C
London
spot_img
Home சமூகம் மைபிபிபி உலு லங்காட் & பாங்கி தொகுதி ஏற்பாட்டில் தீபாவளி விழா!

மைபிபிபி உலு லங்காட் & பாங்கி தொகுதி ஏற்பாட்டில் தீபாவளி விழா!

0
252

காஜாங், நவ.14-

தீபாவளி திருநாளையொட்டி சுற்றுவட்டார மக்களியே பண்டிகைஒ குதூகலத்தை ஏற்படுத்தும் வகையில் மைபிபிபி உலு லங்காட், பாங்கி ஆகிய தொகுதிகள் தீபாவளி விழாவை மிகச் சிறப்பாக நடத்தின.

காஜாங் அரங்கில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் செவிக்கினிய பாடல்கள், நடனங்கள், அதிர்ஷ்ட குலுக்கல் போன்ற அங்கங்களோடு சுவைமிகு உணவு வகைகளும் வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டன.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு மைபிபிபி தேசிய தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டென்னிஸ் டி குருஸ்,பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிசான் ஜொஹான் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

தான் மக்களின் சேவகன் என்றும் காலையில் மலாய்க்காரர்களின் பள்ளிவாசல், இந்துக்களின் ஆலய விவகாரங்களையும் மாலையில் சீனர்களின் கோயில் என அனைத்து இன மக்களின் தேவைகளைச் செவிமடுத்து அதற்குத் தீர்வு கண்டு வருவதாக நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஷாரிசான் குறிப்பிட்டார்.

அனைத்து இன மக்களும் பயனடையும் வகையில் மைபிபிபி ஓரிட சேவை மையத்தைத் தொடங்கியிருப்பதாகவும் தற்போது சில இடங்களில் மட்டுமே செயல்படும் இந்த மையத்தை நாடு முழுமையும் விரிவாக்கம் காண கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் நிகழ்ச்சியில் பேசுகையில் டத்தோஸ்ரீ மெக்லின் விவரித்தார்.

” இந்த சேவை மையத்தின் வாயிலாக மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவற்றை சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண்பதே எங்கள் இலக்கு” என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் சிறந்த தேர்ச்சி பெற்ற உலு லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 6 தமிழ்ப்பள்ளிகளின் 60 மாணவர்களுக்கு ஷாரிசான் மற்றும் டத்தோஸ்ரீ மெக்லின் இருவரும் சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்.

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் பாலமுரளி கோவிந்தராஜூ, மைபிபி இளைஞர் மற்றும் மகளிர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பி 40 பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய கூடைகள் வழங்கப்பட்டன.

இத்தீபாவளி விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாகக் கலந்து கொண்டது இப்பண்டிகையை அனைவருடன் சேர்ந்து கொண்டாடும் இவர்களின் ஒற்றுமை உணர்வையே பிரதிபலிக்கிறது என்று மைபிபிபி உலு லங்காட் தொகுதி தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் சுட்டிக் காட்டினார்.

அரசு சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து கொண்டாடப்பட்ட இவ்விழா வந்திருந்தோருக்கு மனநிறைவையும் தீபாவளி கொண்டாட்ட மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்று மைபிபிபி பாங்கி தொகுதி தலைவர் எம்.குமரவேலு நம்பிக்கை தெரிவித்தார்.