கோலாலம்பூர், டிச.21-
தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளத் தொழில்முனைவர்கள் 45,600 பேருக்கு 99.5 கோடி வெள்ளி நிதியை தெக்குன் நேஷனல் வழங்கியிருப்பதாகத் தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ரமணன் தெரிவித்தார்.
“இதனைத் தொடர்ந்து இந்நாட்டுத் தொழில்முனைவர்களுக்கு மிக அதிகமான வர்த்தக நிதியுதவியை தெக்குன் நேஷனலால் வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.
“கடந்த 1998ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட தெக்குன் நேஷனல் ஏற்பாடு செய்திருக்கும் உதவிகள் மூலம் பயனடைந்த தொழில்முனைவர்களின் பலன்களைப் பலரும் அறியும் வண்ணம் செய்ய வேண்டும்”.
“இன்று நடைபெற்ற தெக்குன் நேஷனலின் விளக்கமளிப்புக் கூட்டத்தின் வழி மாற்றுத் திறனாளிகளும் தொழில்முனைவர்களாக முடியும் என்பது தெரிய வந்தது”.
“தெக்குன் நேஷனல் மூலம் உதவி கிடைத்ததால் ஒரு மலாய் மாற்றுத் திறனாளி வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறையைக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய மாற்றுத் திறனாளி ஒருவர் கோடீஸ்வரராகி விட்டார்” என்று இந்நிறுவனத்தின் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் குறிப்பிட்டார்.




