கோலாலம்பூர், பிப்.27-
மலேசிய சுற்றுலா துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் நியமனம் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக கூறப்பட்டது.
இதற்கு முன்பு இத்துறையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கான அனைத்துலக ஊக்குவிப்பு பிரிவு முதிர்நிலை இயக்குநராக மனோகரன் சேவையாற்றியுள்ளார்.
இவரின் நியமனம் குறித்து எந்தவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இத்துறை வெளியிடவில்லை. அதற்கு பதிலாக வாழ்த்து தெரிவித்த சுவரொட்டியை இயக்குநர் வாரியம் தனது முகநூலில் பதிவேற்றம் செய்தது.
மனோகரன் ஏற்கனவே இந்தியாவுக்கான மலேசிய சுற்றுலா துறை இயக்குநராக 3 தவணைகள் சேவையாற்றியுள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டில் மும்பையில் முதலாவது தேசிய சுற்றுலா அமைப்புக்கான அலுவலகத்தை அமைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்துறையின் இதற்கு முந்தைய இயக்குநர் டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் காபாரின் சேவைக் காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து சுற்றுலா கலை பண்பாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் மனோகரனை அப்பதவிக்கு நியமித்தார்.
-பெரித்தா ஹாரியான்




