Homeமலேசியா2027 முதல் காலாண்டில் 15.7 லட்சம் ரயில் இருக்கைகள்: மலேசிய ரயில்வே நிறுவனம் அறிவிப்பு

2027 முதல் காலாண்டில் 15.7 லட்சம் ரயில் இருக்கைகள்: மலேசிய ரயில்வே நிறுவனம் அறிவிப்பு

கோலாலம்பூர்:

2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 15 லட்சத்து 73 ஆயிரத்து 872 ரயில் இருக்கைகளை வழங்கும் வகையில், மின்சார ரயில் சேவை (ETS) மற்றும் ஈஆர்டி (ERT) சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனையை நவம்பர் 2ஆம் தேதி முதல் கட்டங்களாகத் தொடங்குவதாக மலேசிய ரயில்வே நிறுவனம் (KTMB) அறிவித்துள்ளது.

இதில் 15 லட்சத்து 20 ஆயிரத்து 592 இருக்கைகள் ETS சேவைக்கும், 53 ஆயிரத்து 280 இருக்கைகள் ERT சேவைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2026-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட 11 லட்சத்து 31 ஆயிரத்து 500 இருக்கைகளுடன் ஒப்பிடுகையில், இது 39 விழுக்காடு அதிகமாகும்.

பயணிகள் முன்கூட்டியே தங்களது பயணங்களைத் திட்டமிடுவதற்கு வசதியாக, ஜனவரி மற்றும் பிப்ரவரி 2027க்கான பயணச்சீட்டு விற்பனை நவம்பர் 2ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கும், மார்ச் மாதத்திற்கான பயணச்சீட்டு விற்பனை டிசம்பர் 1-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கும் தொடங்கும்.

இதற்கிடையில், 2027ஆம் ஆண்டில் ETS சேவைகளின் எண்ணிக்கையையும் மலேசிய ரயில்வே நிறுவனம் அதிகரிக்கவுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 44 சேவைகள் வழங்கப்படும் நிலையில், திங்கள் முதல் வியாழக்கிழமை வரை 50 சேவைகளும், வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 58 சேவைகளும் வழங்கப்படும்.

குறிப்பாக, ஜேபி சென்ட்ரல் – கேஎல் சென்ட்ரல் – ஜேபி சென்ட்ரல் வழித்தடத்தில் நாளொன்றுக்கு எட்டு சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த எண்ணிக்கை 12ஆக அதிகரிக்கப்படும். மேலும், கோலாலம்பூர் பழைய ரயில் நிலையம் மற்றும் சுபாங் ஜெயா ரயில் நிலையம் ஆகியவை ETS சேவைகளுக்கான கூடுதல் மையங்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதனிடையே, 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் நீண்ட தூர ETS பயணங்களுக்கான அட்டவணைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இதன்படி, ஜேபி சென்ட்ரலில் இருந்து பட்டர்வொர்த் மற்றும் பாடாங் பெசார் செல்லும் பயணங்களுக்கும், எதிர்த்திசைப் பயணங்களுக்கும் ஒரே ரயிலில் பயணத்தைத் தொடர முடியாது. அதேபோல், பட்டர்வொர்த்தில் இருந்து செகாமாட் செல்லும் பயணிகளும் கேஎல் சென்ட்ரலில் ரயிலை மாற்ற வேண்டும்.

தற்போது, இத்தகைய பயணங்களுக்கு இரண்டு தனித்தனி பரிவர்த்தனைகள் மூலம் பயணச்சீட்டுகளை வாங்க வேண்டியுள்ள நிலையில், 2026 டிசம்பர் முதல் ஒரே பரிவர்த்தனையில் பயணச்சீட்டுகளை வாங்கும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக மலேசிய ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, பயணிகள் பயணச்சீட்டுகளை வாங்குவதற்கு முன்பு ரயில் அட்டவணைகளைச் சரிபார்த்து, கேஎல் சென்ட்ரலில் ரயிலை மாற்றுவதற்குப் போதுமான நேரம் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பயணச்சீட்டுகளை KITS Style செயலி அல்லது www.ktmb.com.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more