பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2-
தமிழ்ப்பள்ளியில் படித்தது இன்று ஆட்சிக்குழு உறுப்பினராக தன்னை உயர் பதவியில் அமர்த்தியுள்ளதாக வீ.பாப்பாராயுடு பெருமையுடன் கூறினார்.
“நானும் எனது அண்ணன் கணபதிராவ் அவர்களும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராவோம் என்று என் தந்தை கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்” என்றார்.
“தெலுக் இந்தான் சிதம்பரம் தமிழ்ப்பள்ளியில் படித்த நான் இன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறேன். நான் படித்த தமிழ் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. தமிழ் யாரையும் கைவிடாது என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டாகும். தமிழ்ப்பள்ளியில் படித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்று இங்குள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் இந்துக் கலைக்களஞ்சியங்களை தமிழ்ப்பள்ளிகளுக்கும் திருக்கோவில்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரை நிகழ்த்தியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதே வேளையில், தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள் இன்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குவதைக் கண்கூடாகக் காண முடிகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்து விடும். பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அங்கு தமிழ்ப்பள்ளிகள் இல்லை. ஆனால் மலேசியாவிலோ 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன”.

இப்பள்ளிகளைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய கடப்பாடு இந்தியர்கள் அனைவருக்கும் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவத்திரு பாலயோகி சுவாமிகளின் ஆசியோடு இன்று நடைபெற்ற இந்து சமய கருத்தரங்கம் மற்றும் இந்துக் கலைக்களஞ்சியங்களை இலவசமாக தமிழ்ப்பள்ளிகளுக்கும் திருக்கோவில்களுக்கும் வழங்கும் இந்நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ குமரன், பேராசிரியர் முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன், மக்கள் சக்தி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன், முனைவர் திலகவதி, முனைவர் பாலகிருஷ்ணன், உயர்திரு சுப்பிரமணி ஆகியோரோடு தவத்திரு பாலயோகி சுவாமிகளும் உரையாற்றினார்





