ஷா ஆலம் மார்ச் 8-
சுங்கை பூலோ, கம்போங் பூங்கா ராயாவில் உள்ள மொத்தம் 36 குடும்பங்கள் சிலாங்கூர் கூ வீடுகளைப் பெறுவார்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கூறினார்.
இவர்களுக்கான 42,000 வெள்ளி பெறுமானமுள்ள வீடுகள் அலாம் பெர்டானா, புஞ்சாக் அலாமில் கட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 30 ஆண்டுகளாக நீடித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றே இது என்றார் அவர்.
“நாங்கள் குடியிருப்பாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினோம். சிலாங்கூர் வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியம் மூலம் மொத்தம் 36 குடும்பங்கள் சிலாங்கூர் கூ வீடுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளன”.
திவால் ஆகாமல் இருப்பது, கடன் ஒப்புதல் பெறுவது போன்ற பல அளவுகோல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.
“பெற்றோர்கள் இறந்துவிட்டால் அவர்களின் பிள்ளைகள் இந்த வீட்டிற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆகையால், இதுவரை , விண்ணப்பம் செய்யாத குடும்பங்கள் அல்லது வாரிசுகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் ” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தேர்வு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, ரூமா சிலாங்கூர் கூ கடிதங்கள் கோத்தா டாமன்சாரா சட்ட மன்ற உறுப்பினர் முகமது இசுவான் காசிம் மூலம் வழங்கப்படும் என்ற தகவலையும் விஸ்மா நெகிரி சிலாங்கூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாப்பாராயுடு வெளியிட்டார்.





