spot_img
14.6 C
London
spot_img
Home சமூகம் தமிழுக்குப் பெருவிழா: ‘மகா கவிதை’ நூலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது!

தமிழுக்குப் பெருவிழா: ‘மகா கவிதை’ நூலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது!

0
324

கோலாலம்பூர், மார்ச் 9-

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை உள்ளடக்கிய ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பு ‘மகா கவிதை’. கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்நூலுக்காக தலைநகரில் அவர் ‘பெருந்தமிழ்’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

மலேசியத் தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விழா தலைநகர், புத்ரா வாணிப மையத்தில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

12 ஆய்வாளர்கள் ஆய்வு செய்த ‘மகா கவிதை’ அறிவியல் ரீதியில் எழுதப்பட்ட பெருங் கவிதை நூலாகும். இது வருங்கால சந்ததியினருக்கு எல்லா நிலைகளிலும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் என்று விழாவிற்குத் தலைமையேற்று உரை நிகழ்த்திய மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

“கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகளும் அவற்றின் அர்த்தங்களும் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதியக்கூடியவை. ஒவ்வொரு பாடலிலும் தனிச் சிறப்பு இருக்கும். அவ்வகையில் அவர் இயற்றிய ‘மகா கவிதை’ நூலுக்காக அவரை கௌரவிப்பதை பெரும் பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம் ” என்றார் விக்னேஸ்வரன்.

ஓர் இளைஞனை எல்லா நிலைகளிலும் வழிநடத்தக்கூடிய ஆற்றல் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்களுக்கு உண்டு என்றார் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்.

“எனக்குப் பதினாறு வயது இருக்கும்போது கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் எனக்கு பெரும் வழிகாட்டியாக இருந்தன. வாழ்க்கையின் முதல் படியில் என்னைக் கைபிடித்தார். அதன் பிறகு திருமண வாழ்க்கை, கட்சியில் வாழ்ந்த போதும் , வீழ்ந்தபோதும் கூட அவரின் பாடல் வரிகள்தாம் எனக்குத் துணை நின்றன. அந்த வகையில் கடந்த 40 வருடங்களாக கவிஞர் வரிமுத்துவை எனக்குத் தெரியும் ” என்றார் அவர்.

52 ஆண்டுகள் முதன்மைக் கவிஞராகத் திகழ்ந்து வருகிறார். இந்த மாபெரும் கவிஞரை தமிழ்க்கூட்டம் கொண்டாடி வருகிறது என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

துன் சாமிவேலு மறைந்தபோது அவர் மூலம் அனுகூலங்கள் பெற்ற தமிழ்நாட்டு பெருமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வருகை தரவில்லை. ஆனால், அவரால் எந்தவோர் அனுகூலத்தையும் பெறாத கவிப்பேரரசு வைரமுத்து அன்னாரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு இரங்கல் பாவையும் படைத்தது அவரின் உன்னத பண்பைச் சித்தரிக்கிறது.

இத்தகைய பண்புடைய கவிஞரின் படைப்புக்கு விருது வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று அவர் மேலும் விவரித்தார்.

‘மகா கவிதை’ நூலுக்காக கவிப் பேரரசு வைரமுத்துவுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் டத்தோஸ்ரீ சரவணனும் ‘பெருந்தமிழ்’ விருது வழங்கி கௌரவித்ததோடு 1 லட்சம் வெள்ளி சன்மானமும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, கவிஞர் கம்பார் கனிமொழி, டத்தோஸ்ரீ முகமது இக்பால், பேராசிரியர் மனோன்மணி தேவி உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.