spot_img
8.5 C
London
spot_img
Home சமூகம் சிவசுப்ரமணியம் தலைமையில் மஇகா பயனீட்டாளர் விவகார குழு

சிவசுப்ரமணியம் தலைமையில் மஇகா பயனீட்டாளர் விவகார குழு

0
368

கோலாலம்பூர், மார்ச் 12-

மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் சில குழுக்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் ஒன்று பயனீட்டாளர் விவகார குழு. இதற்குத் தலைவராக மஇகா மத்திய செயலவை உறுப்பினரான எல்.சிவசுப்ரமணியம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

“சமய குழு, விளையாட்டு குழு, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு குழு போன்ற குழுக்களை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அமைத்துள்ளார். இவற்றிக்குப் பொறுப்பாளர்களாக மத்திய செயலவை உறுப்பினர்களை அவர் நியமித்திருக்கிறார். அந்த வகையில் பயனீட்டாளர் விவகார குழுவிற்கு என்னைத் தலைவராக நியமித்துள்ளார்” என்று இங்குள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சிவசுப்ரமணியம் விவரித்தார்.

மாநில மற்றும் தொகுதி ரீதியாக தலைவர்களை நியமனம் செய்து அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் பற்றாக்குறையைக் கண்காணிப்பதோடு இதனை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதும் இக்குழுவின் பொறுப்பாகும் என்றார்.

எஸ்.எஸ்.டி வரி 2 விழுக்காடு அதிகரிப்பால் பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. இது பயனீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதோடு அவர்களுக்கு சுமையையும் ஏற்படுத்தியுள்ளது.

“இதன் பொருட்டு அரசாங்கம் பி40 மக்களின் வாழ்க்கை நிலையைக் கருத்தில் கொண்டு பொருட்களுக்கான வரியையும் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைக்க வேண்டும் என்று இந்தக் குழு வாயிலாக நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அதே வேளையில், பல்வேறு பொருட்களுக்கான உதவி தொகையும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் விலையேற்றம் கண்டு மக்களுக்குப் பெருஞ்சுமையை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் இதனை அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் சிவசுப்ரமணியம்.