spot_img
12.2 C
London
spot_img
Home சமூகம் சுங்கைப்பட்டாணியில் மக்கள் சக்தி கட்சியின் வரலாற்றுப்பூர்வ நிகழ்வுகள்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்பு வருகை

சுங்கைப்பட்டாணியில் மக்கள் சக்தி கட்சியின் வரலாற்றுப்பூர்வ நிகழ்வுகள்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சிறப்பு வருகை

0
353

கோலாலம்பூர், மார்ச் 19-

இம்மாதம் 23ஆம் தேதி கெடா, சுங்கைப்பட்டாணி சிவலிங்கேஷ்வரர் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா, 2024 மக்கள் சக்தியின் பட்டறை மற்றும் இந்தியர்களின் வரலாற்றுப்பூர்வ பெருமைகளைக் கூறும் நிகழ்வு ஆகியவை நடைபெறவிருப்பதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் ம.இ.கா. தேசிய தலைவர் டான்ஸ்ரீ டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர்களோடு சிறப்பு வருகை புரிவார் என்று அவர் கூறினார்.

நாட்டில் இந்தியர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் கட்சி மஇகா. இதனை சீரிய முறையில் வழிநடத்தி வரும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவருக்கு இவ்வேளையில் தாம் நன்றி கூறுவதாக இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் குறிப்பிட்டார்.

இந்தியர்களிடையே மோசமாகி வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு இந்திய சமூகத்தை ஐக்கியப்படுத்துவதற்காக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கொண்டுள்ள கடப்பாடு மீது தாம் மன நிறைவும் மகிழ்ச்சியும் அடைவதாக தனேந்திரன் சொன்னார்.

சிவலிங்கேஷ்வரர் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழாவில் கலந்து கொண்ட பின்னர் சுங்கைப்பட்டாணி சிந்தா சாயாங் ரிசோர்ட்டில் நடைபெறும் பட்டறை நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மக்கள் சக்தி கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துரையையும் வழங்கவிருக்கிறார்.

இதனையடுத்து, மாலை மணி 5.30க்கு வரலாற்றுப்பூர்வ நிகழ்வு ஒன்று நடைபெறும். இதிலும் விக்னேஸ்வரன் கலந்து கொள்வார். கலை, கலாச்சார நிகழ்வுடன் கூடிய இந்த வைபவம் நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமையும் என்று தனேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்நாட்டிற்கு இந்தியர்கள் வணிகர்களாகவும் வீரர்களாகவும் வந்தவர்கள் என்றுதான் நாம் சொல்ல வேண்டும். இந்தியர்கள் பண்பில் உயர்ந்தவர்கள். உழைப்பில் சிறந்தவர்கள்.அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள், பண்பாட்டு சிகரங்கள் . இந்த பெருமைகளுக்கெல்லாம் ஒரு சான்றாக அமையப் போகிறது இந்நிகழ்ச்சி” என்றார் அவர்.

சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுடில்லியிலிருந்து பிரமுகர்கள் வருகை புரிவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.