கோலாலம்பூர், மார்ச் 19-
ஸ்ரீ முருகன் நிலையத்தின் தலைமையகமாகக் கருதப்படும் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகளுக்கான பதிவு நடவடிக்கையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை புரிந்தது இந்நிலையத்தின் கல்வி புரட்சிக்குப் புத்துயிரூட்டும் வண்ணம் அமைந்தது.
காலை 7.00 மணிக்கெல்லாம் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வரத் தொடங்கியது கல்வியின் மேம்பாட்டில் இவர்கள் கொண்டிருக்கும் அக்கறையையே காட்டுகிறது என்று ஸ்ரீ முருகன் நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.
“சிரம்பானிலிருந்து கூட இக்கல்வி நிலையத்திற்குப் பிள்ளைகள் வந்திருந்தனர். தூரத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் வந்திருந்தனர்” என்றார்.
பிரிக்பீல்ட்ஸில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் காலை 8.00 மணிக்கு வகுப்புகள் நடைபெறும். இந்த வாரத்தில் பதிவுகள் முழுமையாகி விடும். எனினும், சில இடங்கள் இருக்கின்றன. ஒருவேளை முழுமையாகி விட்டால் இயங்கலை வகுப்புகள் நடத்தப்படும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.

இந்த நாட்டில் நம் சமுதாயம் முன்னோக்கிச் செல்வதாக இருந்தால் சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
நம் ஒட்டுமொத்த இந்தியர்களும் கல்விக்காக ஒன்றுசேர வேண்டும், கல்விக்காக ஒரே குரலாக இருக்க வேண்டும். நாம் எவ்வகையில் பிரிந்திருந்தாலும் கூட கல்வியில் ஒரு குரல், ஓர் இலக்காக இருக்க வேண்டும். கல்வி வாயிலாக ஒற்றுமையை வளர்த்து முன்னேறுவது நம் உரிமை. அந்த உரிமையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஸ்ரீ முருகன் நிலையம் கடந்த 1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 42 ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் ஸ்ரீ முருகன் நிலைய பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கோவிட் தொற்று காலத்தில் வகுப்புகள் நடத்துவதை நிறுத்தவில்லை, மாறாக நேரடி வகுப்புகள் இயங்கலை வகுப்புகளாக மாற்றப்பட்டன.
கோவிட் கால கட்டத்தில் நிறுத்தப்பட்ட நேரடி வகுப்புகளை நடத்த இன்று மீண்டும் ஸ்ரீ முருகன் நிலையம் களத்தில் இறங்கியுள்ளது. பினாங்கு, பேரா, கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் 40 ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 127 ஹைப்ரிட் மையங்கள் நேரடி வகுப்புகள், நேரலை மையங்களில் நாடு முழுவதும் ஆங்காங்கே தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுரேந்திரன் சொன்னார்.
ஸ்ரீ முருகன் நிலையத்தைப் பொறுத்தவரை அதிகமான 6ஆம் ஆண்டு மாணவர்களாகத்தான் இருப்பார்கள். எனினும், இந்த ஆண்டில் அவர்களின் எண்ணிக்கைக் குறைந்து காணப்பட்டது. காரணம் தேர்வு இல்லை என்ற எண்ணம் பெற்றோர்கள், மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. இது ஒரு பெரும் தவறான கருத்து தேர்வு இல்லாத பட்சத்தில் கல்வி புரட்சி வேறு விதமாகச் செயல்படுத்தப்படுகின்றது என்றார்.
“ஸ்ரீ முருகன் நிலையத்தில் 5 திறன்களை நாங்கள் கற்றுக் கொடுப்போம். தேர்வில் மட்டும் சிறந்த தேர்ச்சிகளைப் பெறுவதற்கு நாங்கள் வகுப்புகளை நடத்தவில்லை, நல்ல கட்டொழுங்குமிக்க மனிதனை உருவாக்க நாங்கள் வகுப்புகளை நடத்துகிறோம். இந்திய மாணவர்களுக்கு அயல்நாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்” என்று அவர் மேலும் விவரித்தார்.




