கோலாலம்பூர், ஏப்.27-
கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் மற்றும் மகிமா இணைந்து நடத்தும் திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு நாளை 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.
இம்மாநாடு காலை மணி 9.30 தொடங்கி இரவு 7.30 மணி வரை கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், பாங்குனான் மஹா மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறும்.
ஓதுவார் சு.கனேந்திரனின் இறை வணக்கத்துடன் தொடங்கும் இம்மாநாட்டில் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் கௌரவ பொருளாளரும் அறங்காவலருமான டத்தோ பெ.அழகன் வரவேற்புரை ஆற்றுவார்.
இதனை தொடர்ந்து ஈப்போ இசைப் பேரரசி ஸ்ரீமதி யமுனா ஆறுமுகத்தின் இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.
இதனையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த இர.கங்கை மணிமாறன் ஆன்மிக உரை ஆற்றுவார்.
மதிய உணவுக்கு பின்னர் கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் மராமத்துப் பொறுப்பாளரும் அறங்காவலருமான கயிலை மணி டத்தோ நா.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றுவார்.
நடனத்தைத் தொடர்ந்து கோலாலம்பூர் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவரும் அறங்காவலருமான திருப்பணிச் செம்மல் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர்.நடராஜா தலைமையுரை ஆற்றுவார்.
இம்மாநாட்டிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் முன்னாள் மனித வள அமைச்சரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு பேருரை ஆற்றுவார்.
மாலை 6.00 மணியளவில் தேவஸ்தான சேவாதாரிகளுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்யும் நிகழ்ச்சியோடு இந்த மாநாடு ஒரு நிறைவை அடையும்.
சுற்று வட்டார மக்கள் அனைவரும் இம்மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்ளும்படி டான்ஸ்ரீ நடராஜா அழைப்பு விடுக்கின்றார்.





