காஜாங், ஏப்.28-
அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதே இப்போதைக்கு முக்கியம் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ லோக பாலா கூறினார் .
தங்களின் தேவைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக இத்தொகுதியில் வசிக்கும் இந்தியர்கள் மன அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
“இத்தேர்தலில் நடப்பு அரசாங்க வேட்பாளருக்கு ஆதரவளித்து தங்களின் உயரிய பண்பை வெளிப்படுத்திய பின்னர் நிறைவேறாதத் தங்களின் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பது சிறந்த அணுகுமுறையாகும்” என்றார் லோக பாலா.
நமது தேவை நிறைவேற்றப்படுவதற்கு முதலில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்பது பண்பாகும். அந்த வகையில் தங்களின் ஆதரவை அரசாங்க வேட்பாளருக்கு வழங்கும்படி இந்திய வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

வெற்றி பெறும் வேட்பாளரிடம் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதன் வழி தங்களின் தேவைகளை வாக்காளர்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று இங்குள்ள மைபிபிபி சேவை மையத்தில் கணேஷ் ராமின் 'புதிய பாதை' எனும் அறிவியல் புத்தாக்க நூல்களை வெளியீடு செய்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த இடைத்தேர்தலில் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் மைபிபிபி பணிக்குழு பக்காத்தான் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்டி வருவதாக அவர் மேலும் சொன்னார்.





