ஈப்போ, ஜூலை 12-
பேரா மாநிலத்தில் இந்துக்கள் வழிபடுவதற்குத் தேவையான ஆலயங்கள் தற்போது உள்ளன. ஆகையால், புதிய ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கேட்டுக் கொண்டார்.
இம்மாநிலத்தில் சில ஆலயங்கள் முறையாக நிர்வகிக்கப்படாமல் பதிவு ரத்தாகும் நிலையில் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில், பல ஆலயங்கள் பல லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று வழிபாடு செய்ய பக்தர்கள் இல்லாத நிலையில் உள்ளதையும் அவர் எடுத்துரைத்தார்.
ஆகையால், இருக்கின்ற ஆலயங்களை முறையாகப் பாதுகாத்து நிர்வகிக்கப்பட வேண்டும் என்று இன்று கோப்பெங், கோபிசான் எனும் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
பேரா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டு தலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1 கோடி ரிங்கிட் முறையாகச் செயல்படும் ஆலயங்களுக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் சிவநேசன் சொன்னார்.
கோவிட் தொற்றின் போது நிர்மாணிப்பு கைவிடப்பட்ட ஆலயங்களின் திருப்பணிக்காக இந்நிதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
81 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோப்பிசான் முத்து மாரியம்மன் ஆலயம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மாநில அரசு மூலம் 50 ஆயிரம் ரிங்கிட், கோப்பெங் நாடாளுமன்றம், தேஜா சட்டமன்றம், மத்திய அரசு என மொத்தம் 226, 000்ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

கோப்பெங் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு 55 ஆயிரம் வெள்ளி மற்றும் இந்த வட்டாரத்தில் மேலும் இரண்டு ஆலயங்களுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
வெகு விமரிசையாக நடைபெற்ற அருள் மிகு முத்து மாரியம்மன் ஆலயத்தின் ஐந்தாவது கும்பாபிஷேக பெரு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
இவ்விழாவில் கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் காய் இங் , தேஜா சட்டமன்ற உறுப்பினர் சந்திர இங் உட்பட பல பிரமுகர்கள் சிறப்பு வருகை புரிந்தனர்.





