ஈப்போ, ஜூலை 12-
பல ஆக்கப்பூர்வ திட்டங்கள் வழி இந்திய சமூகத்தினரை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இவ்வட்டார இந்தியர்கள் வர்த்தக துறையில் சிறந்து விளங்கும் பொருட்டு பேரா இந்தியர் வர்த்தக சபை இந்தியர் உருமாற்ற பிரிவான மித்ராவின் ஆதரவோடு பல்வேறு துறைகள் சார்ந்த பயிற்சிகளை நடத்தியது.
இந்தப் பயிற்சி திட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஆறு மாத கால பயிற்சி திட்டமாகும். இதன் முதல் மூன்று மாத பயிற்சி ஈப்போ இந்திய வர்த்தக சபை மண்டபத்தில் நடைபெற்றது.
வர்த்தக துறையில் இந்தியர்களின் பங்களிப்பை அதிகரிக்க மேலும் அதிகமானவர்களுக்கு மித்ரா கடனுதவி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று முதல் மூன்று மாத கால பயிற்சியின் நிறைவு விழாவில் உரையாற்றிய பேரா இந்திய வர்த்தக சபை தலைவர் ரவிசங்கர் பாலசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.
இப்பயிற்சியில் பங்கேற்ற 15 பேருக்கு மீன் வளர்ப்பு, சிகை அலங்காரம், விவசாய துறை, கோழி வளர்ப்பு துறை போன்ற துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார் .





