சுங்கை பூலோ, ஜன. 14-இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தெக்குன் ஸ்பூமி மற்றும் ஸ்பூமி கோஸ்பிக் வாயிலாக இவ்வாண்டு 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பொங்கல் கொண்டாட்டத்தில் நற்செய்தியாக தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இத்தகவலை அறிவித்தார்.
இந்த வாய்ப்பை இந்தியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தனது சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை தெக்குன் கடனுதவியை இந்தியர்கள் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் தெக்குன் வாயிலாக இதுவரை 24,000 தொழில் முனைவர்கள் உருவாகியுள்ளனர்” என்பதை துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில், இவ்வாண்டு தெக்குன் வழி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் 100 மில்லியன் வாயிலாக ஏறத்தாழ 5,000 வர்த்தகர்கள் பயனடைவர் என்றார்.
இந்தியர்களுக்காக கடந்தாண்டு 7 திட்டங்கள் அமல்படுத்தபட்ட வேளையில் இவ்வாண்டு 10 திட்டங்களை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
இந்தியர்களுக்கு எது தேவையோ அதனை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் என்று ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, தெக்குன் கடனுதவி சிறிய வட்டி விகிதத்தைக் கொண்டது. ஆகையால் இந்த 100 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை இந்தியர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெக்குன் வாரியக் குழு இயக்குனர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் பொருளாதார துறையில் மேன்மை காண வேண்டும் என்ற நோக்கத்தில் துணையமைச்சர் 100 மில்லியன் வெள்ளியை அறிவித்துள்ளதாக அவரின் முதிர்நிலை செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் குறிப்பிட்டார்.
மேலும் பல நல்ல வாய்ப்புகள் இந்தியர்களை நாடி வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


