காஜாங், மார்ச் 16-எஹ்சான் குரூப் ஆஃப் கம்பெனி ஏற்பாட்டில் நோன்பு துறப்பு மற்றும் வசதிகுறைந்தவர்களுக்கான ஹரிராயா அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்புனித நோன்பு மாதத்தில் சிரமத்தில் உள்ளவர்களுக்கு இதன் வழி ஓரளவு உதவிட முடியும் என்று எஹ்சான் குரூப் ஆஃப் கம்பெனியின் நிறுவனர் டத்தோ அப்துல் ஹமிட் பிவி அப்து தெரிவித்தார்.

காஜாங் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 1,000திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வறிய நிலையில் உள்ளவர்கள் மற்றும் ஆதரவற்ற சிறார்கள் என 500 பேருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

“சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்களுக்காக கடந்த 32 வருடங்களாக இந்நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம் “ என்றார் அப்துல் ஹமிட்.
நாடு முழுவதும் உட்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் உணவு பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை தாங்கள் வழங்கி வருவதாக அவர் மேலும் சொன்னார்.
வருகை புரிந்த அனைவருக்கும் பல்சுவை உணவு வகைகள் வழங்கப்பட்டன.
மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்க(பெரெஸ்மா) தலைவர் டத்தோ ஹவஹர் அலி மற்றும் இதர பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.


