காஜாங், மார்ச் 15-பெண்கள் பல துறைகளில் தற்போது அடைந்து வரும் முன்னேற்றம் சமூகத்தில் அபரிமித மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று பிபிபி சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.
பெண்களின் துணிவும், தன்னம்பிக்கையும் இவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கின்றன. இத்தகைய பண்புகள் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக அமையும் என்றார்.

இங்குள்ள பிபிபி அலுவலகத்தில் பிபிபி பாங்கி மற்றும் உலுலங்காட் தொகுதி ஏற்பாடு செய்த மணப் பெண் அலங்காரம், சேலை கட்டும் பயிற்சி மற்றும் முக ஒப்பனை பயிற்சி பட்டறையை முடித்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார் .
இன்று காலை மணி 9.00 தொடங்கி மாலை 4.00 மணிவரை நடைபெற்ற இப்பயிற்சி திட்டத்தை பிபிபி பாங்கி தொகுதி தலைவர் குமரவேலு தொடக்கி வைத்தார்.
இது இவ்வட்டார பெண்களுக்கான தொடக்க கட்ட பயிற்சி என்றும் இப்பயிற்சி மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் சுரேந்திரன்.
“தனித்து வாழும் தாய்மார்கள், வறிய நிலையில் வாழும் பெண்கள் என அனைத்து நிலையில் உள்ள பெண்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர் . இதற்கு வயது கட்டுப்பாடும் கிடையாது”என்றார்.
இதில் கலந்து கொண்ட பெண்கள் இத்துறையை வியாபாரமாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று வாழ்வில் முன்னேற்றம் காணலாம் என்றார்.
இப்பயிற்சியில் பெண்களின் ஈடுபாடு வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைப் புலப்படுத்தியது என்றார் இதன் பயிற்றுனரான மாலதி சின்னதம்பி.
“இந்த ஒருநாள் பயிற்சியில் முழு கவனமுடனும், ஆர்வத்துடனும் பெண்கள் பங்கேற்றனர். இவற்றை நன்கு கற்றுக் கொண்டு வர்த்தகத்தைத் தொடங்குவதற்கு இவர்கள் தயார் நிலையில் இருப்பதைக் காண முடிந்தது “என்றார் கடந்த 28 ஆண்டுகளாக இத்துறையில் வெற்றிகரமாகக் கால் பதித்து வரும் மாலதி.

இப்பயிற்சிக்காக தாங்கள் உண்மையில் எதிர்பார்த்தது 50 பேர் மட்டுமே என்றும் இதையும் தாண்டி 62 பேர் இதில் கலந்து கொண்டது மணப் பெண் அலங்காரம், சேலை கட்டும் பயிற்சி மற்றும் முக ஒப்பனை ஆகிய துறைகளில் பெண்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தையே புலப்படுத்துகிறது என்றார் பிபிபி பாங்கி தொகுதி மகளிர் பிரிவு தலைவி கலைச் செல்வி கோவிந்தன்.
இந்த நிகழ்ச்சிக்கு பிபிபி சிலாங்கூர் மாநில மகளிர் தலைவி மெர்லின் டி குருஸும் வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


