ஷா ஆலம், மார்ச் 16-பிரதமர் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாம் இரண்டு தவணைகளுக்கு மேற்பட்டோ அல்லது கூடுதல் பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்டோ பிரதமராக பதவி வகிக்க எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதன் அடிப்படையில் பிரதமர் பதவி காலத்தை வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வரையறை செய்யும் பரிந்துரையை தாம் ஏற்றுக் கொள்வதாக அன்வார் குறிப்பிட்டார்.
“ பிரதமர் பதவியை 10 ஆண்டுகள் மட்டுமே வகிப்பது உட்பட சில பரிந்துரைகளை நான்முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்று இங்குள்ள ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 18 ஆவது ஜசெக தேசிய மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
“காரணம் நமக்கெல்லாம் தெரியும் அது 22 ஆண்டுகள் தாண்டினால் நாட்டையே சீரழித்துவிடும் என்று” என தம்மை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவைக் கேலி செய்யும் வகையில் அவர் பேசினார்.
இந்தப் பரிந்துரையை பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் உறுப்பு கட்சிகள் ஏற்றுக் கொண்டாலும் கூட இது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவது அவசியம் என்பதை பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் சுட்டிக் காட்டினார்.
-மலேசியா கினி


