ஷா ஆலம், மார்ச் 16-ஜசெக மத்திய செயற்குழுவில் மிகப் பெரிய மாற்றங்களைத் தாம் கொண்டு வரப் போவதாக இக்கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்த சீரமைப்பில் அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் ஜசெக நாடாளுமன்ற தலைவராகத் திகழ அனுமதிக்கப்பட மாட்டாது. அதே வேளையில், சில புதிய பதவிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று இங்குள்ள ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 18 ஆவது ஜசெக தேசிய மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் லோக் விவரித்தார்.
இதன் அடிப்படையில் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஜசெக நாடாளுமன்ற தலைவராக இனி பதவி வகிக்க முடியாது என்றார் லோக்.
இதற்காக ஙா கோர் மிங்கிடம் அவர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ஜசெக உரக்கக் குரல் எழுப்பாது என்ற குற்றச்சாட்டைப் போக்கும் வகையில் கட்சியின் மத்திய செயலவையில் சில புதிய பதவிகளை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இது பின்னர் கட்சி சட்ட விதிகளில் சேர்க்கப்படும்”என்றார்.
“ எங்கள் கட்சிக்காக துணிச்சலோடு குரல் எழுப்பக்கூடிய புதிய நாடாளுமன்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறோம்” என்றார்.
மத்திய செயற்குழுவில் வியூக இயக்குநர்,கொள்கை இயக்குநர். மற்றும் தேர்தல் இயக்குநர் ஆகிய பதவிகள் புதிதாக உருவாக்கப்படவிருப்பதாக லோக் சுட்டிக் காட்டினார் .
தேர்தல் வேட்பாளர் முறை சட்ட விதிகளில் இடம் பெறும் என்ற தகவலை இதற்கு முன்பு போக்குவரத்து அமைச்சருமான லோக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.