பூச்சோங் ஏப் 8-அண்மைய புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அப்பாதிப்பில் இருந்து மீளவில்லை.
இந்நிலையில் இவர்களின் வீட்டு தவணை பணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கும்படி வங்கி தரப்பினரை சிலாங்கூர் பிபிபி தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பழுது பார்க்க நீண்ட காலம் ஆகலாம்.
வீட்டு உரிமையாளர்களில் பெரும்பாலோர் தங்கள் வீட்டிற்காக வங்கியில் கடன் பெற்றிருப்பர்.
ஆகையால், சவால்மிக்க இக்காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் மாத தவணைப் பணத்தை செலுத்துவதற்குச் சற்று கால அவகாசம் வழங்கும்படி வங்கி தரப்பினருக்கு இவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை இவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் கட்சி பொறுப்பாளர்களோடு இணைந்து வழங்கினார்.

“சோதனை காலத்தில் இன பாகுபாடு பாராமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது நமது பண்பாகும் “ என்றார்.
இத்தகு பேரிடர் இனி வரும் காலங்களில் நிகழாமல் இருப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கம் முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் .
“ பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப ஏதுவாக நாம் அனைவரும் இவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்” என்றார் சுரேந்திரன்.



