கோலாலம்பூர், ஜூலை 17-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) மன்னிப்பை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறைந்த தியோ பெங் ஹோக்கின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதில் நேர்மையோ, வருந்தக்கூடிய அம்சமோ அறவே இல்லை. எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அஸாம் பாக்கியின் மன்னிப்பு விளம்பரத்திற்காக செய்யப்பட்டதே தவிர பொறுப்பேற்கும் தன்மையிலோ அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்காகவோ அல்ல என்று தியோ பெங்கின் தங்கை லீ லான் குறிப்பிட்டார்.
“நாங்கள் வேதனைப்படுவதைப் பார்த்ததால்தான் அவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். இதில் உண்மை இல்லை”என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் லீ லான் விவரித்தார்.
“சந்தேகிக்கப்படும் சம்பந்தப்பட்ட எஸ்பிஆர்எம் அதிகாரி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு நீதியும், நியாயமும் வேண்டும்.
அந்த தினத்தில் எஸ்பிஆர்எம்மில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
“எங்களுக்குத் தேவை நீதி. இழப்பீடு அல்ல” என்று அவர் வலியுறுத்தினார் .


