Homeவர்த்தகம்உலகளவில் போட்டியிடக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்ப முன்னோடிகளை தொடர்ந்து உருவாக்குவதே மலேசியாவின் அடுத்தகட்ட இலக்கவியல் முன்னேற்றம்

உலகளவில் போட்டியிடக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்ப முன்னோடிகளை தொடர்ந்து உருவாக்குவதே மலேசியாவின் அடுத்தகட்ட இலக்கவியல் முன்னேற்றம்

மலேசியாவின் அடுத்தகட்ட இலக்கவியல் மாற்றம், இலக்கவியல் பொருளாதாரத்தில் வெறும் பங்கேற்பிலிருந்து தலைமைத்துவ நிலைக்கு முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக உள்நாட்டிலேயே தீர்வுகளை உருவாக்குதல், புத்தாக்கங்களை வர்த்தகமயமாக்குதல் மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய மலேசிய நிறுவனங்களை உருவாக்குதல் அவசியமாகும்.

மலேசிய இலக்கவியல் பொருளாதாரக் கழகத்தின் (MDEC) மூத்த துணைத் தலைவர் (கார்ப்பரேட் விவகாரங்கள்), டத்தோ Ts. ஃபட்ஸ்லி அப்துல் வாஹித் கூறுகையில், மலேசியா ஏற்கனவே இலக்கவியல் பொருளாதாரத்தில் தீவிரமாக பங்கேற்று வரும் நாடாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் தொழில்நுட்பங்கள், தரவுகள் மற்றும் இலக்கவியல் தளங்கள் வணிகங்களையும் பொருளாதாரத்தையும் மாற்றியமைத்து வரும் நிலையில், அதிக மதிப்பை உருவாக்கும் நாட்டின் திறனை மேலும் வலுப்படுத்துவதே அடுத்த சவாலாகும் என்றார்.

“அடுத்தகட்ட முன்னேற்றம் என்பது அதிக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அல்லது கூடுதல் உள்கட்டமைப்பு முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமாக இருக்கக்கூடாது. மலேசியா தனது சொந்த தீர்வுகளை தொடர்ந்து உருவாக்கி, அதிக மதிப்பை ஏற்படுத்துவதுடன், சர்வதேச அளவில் விரிவடையக்கூடிய புத்தாக்கங்களையும் மேம்படுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு, மூலதனம், நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு வரும் தரமான இலக்கவியல் முதலீடுகளை மலேசியா தொடர்ந்து ஈர்ப்பதுடன், மலேசிய நிறுவனங்கள் நாட்டின் எல்லைகளைக் கடந்து விரிவடைவதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும் என்று ஃபட்ஸ்லி கூறினார்.

“வெற்றிகரமான இலக்கவியல் பொருளாதாரம் என்பது உலகளாவிய நிறுவனங்களை மலேசியாவிற்கு ஈர்ப்பதோடு மட்டுமின்றி, மலேசிய நிறுவனங்களும் வளர்ந்து உலகளவில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.”

அண்மையில் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) ஏற்பாடு செய்த 2026 உலகளாவிய வணிகம் மற்றும் இலக்கவியல் பொருளாதாரம் தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாட்டில் பிரதான உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலைத்தன்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு நாடாக மலேசியாவை உருவாக்குவதுடன், இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான பிராந்திய மையமாக நாட்டை நிலைநிறுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ‘Made by Malaysia’ தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மேம்பாடும் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

இதனுடன், Malaysia Digital Action Plan 2030 (MD2030), 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இலக்கவியல் பொருளாதாரத்தின் பங்களிப்பை 30 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை முன்வைக்கிறது.

இந்த இலக்குகளை அடைவதற்கு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது என்று ஃபட்ஸ்லி தெரிவித்தார். புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், புதிய சந்தைகளுக்குள் நுழையவும் மற்றும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை கண்டறியவும் வணிகங்கள் இலக்கவியல்மயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

செயற்கை நுண்ணறிவு, தானியக்கத் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட தரவு பகுப்பாய்வு ஆகியவை புத்திசாலித்தனமான உற்பத்தி, திறன்மிக்க நிதிச் சேவைகள், மேம்பட்ட சுகாதார சேவைகள் மற்றும் அதிக உற்பத்தித்திறன் கொண்ட வேளாண்மை ஆகியவற்றை உருவாக்குவதற்கு உதவுவதுடன், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) புதிய வாடிக்கையாளர்களையும் சந்தைகளையும் சென்றடையவும் உதவ முடியும் என்று அவர் கூறினார்.

ஆராய்ச்சிகளை வர்த்தகத் தீர்வுகள், புதிய வணிகங்கள் மற்றும் நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் தொழில்நுட்பங்களாக மாற்றுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“தொழில்நுட்பத்தை வாங்க முடியும். உள்கட்டமைப்பை உருவாக்க முடியும். மூலதனத்தை திரட்ட முடியும். ஆனால் நிலையான புத்தாக்கத்திற்கு திறமையான மனிதவளம், ஆராய்ச்சி, தொழில்முனைவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவையும் அவசியம்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பல துறைகளிலும் தொழில்களிலும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்பட்டு வரும் நிலையில், திறமையான மனிதவளம் தொடர்ந்து மிக முக்கிய பங்காற்றும் என்று ஃபட்ஸ்லி கூறினார். செயற்கை நுண்ணறிவைப் பற்றிய புரிதல் இனி தொழில்நுட்பக் குழுக்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் இலக்கவியல் சூழலமைப்பை வலுப்படுத்துதல், உள்நாட்டு புத்தாக்கத்தை ஆதரித்தல், தரமான முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் மலேசிய நிறுவனங்களுக்கும் திறமையான மனிதவளத்திற்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் அரசு, தொழில்துறை மற்றும் கல்வித்துறையுடன் MDEC தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more