இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுத விருக்கும் தனது மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அரினா மெட்ரிக்ஸ் கல்வி நிலையம் கூடுதல் பயிற்சி பட்டறையை நடத்தத் திட்டமிட்டு ள்ளது.
எஸ்பிஎம் தேர்வு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் நிலையில் மாணவர்கள் எந்தெந்த தலைப்புகளில் பலவீனமாக இருக்கிறார்களோ அவற்றை ஆராய்ந்து கூடுதல் புள்ளிகளைப் பெறுவதற்கான பயிற்சியைத் தாங்கள் விரைவில் நடத்தவிருப்பதாக அரினா மெட்ரிக்ஸ் கல்வி நிலையத்தின் தோற்றுநர் ஜனகன் ஆறுமுகம் (ஜனா)குறிப்பிட்டார்.
யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் இல்லாத நிலையில் இவர்கள் முதல் தேர்வாக எஸ்பிஎம் சோதனையில் அமரவிருக்கின்றனர். பயம் மனதை ஆட்கொண்டிருக்கும் பட்சத்தில் இவர்களை தேர்வுக்கு முழுமையாகத் தயார்படுத்தும் கடப்பாட்டை ஆசிரியர்களாகிய தாங்கள் கொண்டிருப்பதாக இந்தக் கல்வி நிலையத்தின் கணிதப் பாட ஆசிரியருமான ஜனா விவரித்தார்.
அதே சமயம், 2027 எஸ்பிஎம் தேர்வை எழுதும் மாணவர்களுக்காக அதன் பாடத் திட்டம், கடந்தாண்டு தேர்வின் மீள்பார்வை பயிற்சி போன்றவற்றை நடத்தத் தயாராக இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
இதனிடையே,தனது மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு அரினா மெட்ரிக்ஸ் கல்வி நிலையம்
ஷா ஆலம், ஜாலான் புக்கிட் கெமுனிங், 8ஆவது மைல், ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜைக்கு ஏற்பாடு செய்தது.
இப்பூஜையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் பள்ளி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
அரினா மெட்ரிக்ஸ் கல்வி நிலையம் மூன்றாம் ஆண்டாக இந்தப் பூஜைக்கு ஏற்பாடு செய்தது. இப்பூஜை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.


