பினாங்கு:
தேசிய வகை பாய் சாய் சீனப்பள்ளியில் நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பழுதுபார்க்க RM30,643.92 ஒதுக்கப்பட்டுள்ளதாகப் புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் சியர்லீனா அப்துல் ரஷீத் தெரிவித்தார்.
இத்திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த அவர், பள்ளிகளில் சீரான நீர் விநியோகம் உறுதி செய்யப்படுவது அடிப்படைத் தேவையாகும் என்றார்.
கழிப்பறைகளின் தூய்மை முதல் உணவு தயாரிப்பு வரையிலான அன்றாடப் பணிகள் வரை, பள்ளிச் செயல்பாடுகள் சீரான நீர் விநியோகத்தைச் சார்ந்துள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் தூய்மையான, வசதியான சூழலில் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கு இணையாக, ஏற்கெனவே உள்ள பள்ளி உள்கட்டமைப்புகளை முறையாகப் பராமரிப்பதும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார். பழுதுகளை உடனடியாகச் சரிசெய்வதன் மூலம் பள்ளிச் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதுடன், எதிர்காலத்தில் அதிக செலவில் பழுதுபார்க்க வேண்டிய நிலையும் தடுக்கப்படும் என்றார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், கல்வி அமைச்சுக்கு கிட்டத்தட்ட RM69 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கல்வி நிறுவனங்களின் பராமரிப்புக்காக RM1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒதுக்கீடுகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நேரடியாகப் பயனளிக்கும் மேம்பாடுகளைக் கொண்டுவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நாடாளுமன்ற ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வது தமது பொறுப்பு என்றும் அவர் கூறினார். மொழி வழிக் கல்வி அல்லது மாணவர்களின் பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பள்ளிக்கும் உரிய கவனமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
பள்ளி நிர்வாகம் உதவி கோரும்போது, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, தீர்வுகளை முன்னெடுப்பதில் ஒத்துழைப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய முயற்சிகளில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஆகியோரின் ஒத்துழைப்பும் முக்கியமானது என்றார்.
இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஒத்துழைத்த தேசிய வகை பாய் சாய் சீனப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லிம் சூன் சியாங், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் லிம் பாங் வான், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பள்ளிகளின் அவசர உள்கட்டமைப்புத் தேவைகளைக் கண்டறிந்து, கிடைக்கும் வளங்களுக்கு ஏற்ப தீர்வுகளை முன்னெடுக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாகவும் ஷெர்லீனா தெரிவித்தார்.


