கோலாலம்பூர் , நவம்பர் 4: புச்சோங்கில் செயல்பட்டு வந்த கோழி இறைச்சி விநியோக நிறுவனத்தில் ஹலால் நடைமுறைகள் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையை மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) வரவேற்றுள்ளது.
ஜாக்கிம், சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜாய்ஸ்) மற்றும் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை மற்றும் நடவடிக்கைக்கு பெர்மிம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹலால் விதிமுறைகளை மீறுவோர் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பெர்மிம் தேசியத் தலைவர் முகம்மது அஸ்மான் ஷா, ஹலால் சான்றிதழ் என்பது வெறும் வணிக அனுமதி மட்டுமல்ல; அது முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையுடனும் இஸ்லாமிய மதிப்புகளுடனும் தொடர்புடைய புனிதமான பொறுப்பு என்று தெரிவித்துள்ளார். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் மற்ற தொழில்துறையினருக்கும் எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மலேசியாவின் உலகளாவிய ஹலால் மையம் என்ற நற்பெயரையும், ஹலால் சான்றிதழ் மீதான உள்ளூர் மற்றும் சர்வதேச நுகர்வோரின் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹலால் விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அரசாங்கமும் அமலாக்க அமைப்புகளும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெர்மிம் கேட்டுக்கொண்டுள்ளது.


