கோலாலம்பூர், நவ. 8-
நாட்டில் பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக வர்த்தக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வர்த்தகர்களுக்கு மலேசிய கடன் உத்திரவாத கழகம் (சி.ஜி.சி) கடனுதவியை வழங்க முன்வந்துள்ளது. இயற்கை பேரிடர்களால் வர்த்தக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அக்கழகம் அறிமுகப்படுத்திய பிஸ்பினா-ஐ எனும் திட்டத்தின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்படுவதாக அக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
நேற்று பேங்க் நெகாரா மலேசியா (பி.என்.எம்) அறிவித்துள்ள இயற்கை பேரிடர் உதவி திட்டத்தை தொடர்ந்து சி.ஜி.சி. கழகம் இதனை அறிவித்துள்ளது. பி.என்.எம்.மின் கண்காணிப்பின் கீழ் உள்ள வர்த்தக வங்கிகள், பேங்க் இஸ்லாம் மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் பெறும் கடனுதவிக்கு சி.ஜி.சி. கழகம் 60 விழுக்காடு வரையில் உத்திரவாதத்தை அளிக்கின்றது.
அதோடு, சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சில மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்தை மீண்டும் வெற்றிகரமாக தொடருவதற்கு உதவும் வகையில் இந்த முயற்சியை சி.ஜி.சி. கழகம் மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேசிய இயற்கை பேரிடர் நிர்வாக அமைப்பு (நட்மா), பிரதமர்துறை முதலானவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட நகரம் அல்லது மாவட்டம் ஆகிய பகுதிகளில் வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் வர்த்தகர்கள் இந்த கடனுதவியை பெறுவதற்கான தகுதியை பெறுகின்றனர்.
இது குறித்து சி.ஜி.சி. கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ முஹம்மட் ஜம்ரி முஹம்மட் இஷாக் கூறுகையில், இயற்கை பேரிடர் ஏற்பட்டால் பாதிக்கப்படும் நம்பிக்கைக்குரிய வர்த்தகர்களுக்கும் உதவும் நோக்கில் இந்த பிஸ்பினா-ஐ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் சுமையை குறைக்க முடியும் என நம்புகின்றோம். இந்த திட்டத்தின் கீழ் 5 ஆண்டு கால அடிப்படையில் 20,000 முதல் 200,000 வரையில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் கடனுதவியை பெற முடியும். குறிப்பாக, முதல் 6 மாதங்களுக்கு அவர்கள் தங்களது கட்டணத்தை திருப்பி செலுத்த தேவையில்லை. 6 மாதங்களுக்கு பிறகுதான் அவர்கள் தாங்கள் பெற்ற கடனுவிக்கான மாதாந்திர கட்டணத்தை செலுத்த தொடங்குவர் என டத்தோ முஹம்மட் ஜம்ரி முஹம்மட் இஷாக் குறிப்பிட்டார்.
இந்த கடனுதவி திட்டம் குறித்த மேல்விவரங்களுக்கு நாடு முழுவதிலுமுள்ள சி.ஜி.சி. கழகத்தின் 16 கிளைகளை வர்த்தகர்கள் நாடலாம். மேலும், சி.ஜி.சி. கழகத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணான 03-78800088 வாயிலாகவும் csc@cgc.com.my எனும் மின்னஞ்சல் வாயிலாகவும் www.cgc.com.my அகப்பக்கம் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.


