ஷா ஆலம், நவ.13-
சிலாங்கூர் மாநில அரசாங்கம் இதுவரையில் ஊராட்சித்துறைகளிடமிருந்து வாகன நிறுத்துமிட கட்டணத்தின் வாயிலாக 4 கோடியே 95 லட்சம் வெள்ளியை பெற்றுள்ளது. இது குறித்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என் யோங் ஹியான் வா கூறுகையில், ஊராட்சி துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களின் நிர்வாக செலவாக 94 லட்சம் வெள்ளி பதிவாகி இருப்பதாக கூறினார்.
உலுசிலாங்கூர், கோலசிலாங்கூர், சபாக் பெர்ணம் ஆகியவற்றில் இந்த வாகன நிறுத்துமிட சேவை இன்னும் அமல்படுத்தப்படவில்லை. அதனால், இந்த மூன்று ஊராட்சிகளை தவிர இதர 9 ஊராட்சி துறைகளிடமிருந்து இந்த வருவாய் பெறப்பட்டுள்ளது.
ஷா ஆலம் மாநகர் மன்றம் (76 லட்சம்), பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (1 கோடியே 89 லட்சம்), கிள்ளான் நகராண்மை கழகம் (73 லட்சம்), அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (61 லட்சம்), சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (65 லட்சம்), காஜாங் நகராண்மை கழகம் (23 லட்சம்), செலாயாங் நகராண்மை கழகம் (188,916), சிப்பாங் நகராண்மை கழகம் (232,366.60), கோல லங்காட் மாவட்டம் (188,940.66) என மொத்தம் 4 கோடியே 95 லட்சம் வெள்ளி வசூலிக்கப்பட்டது.
வாகன நிறுத்துமிட சேவை இடம்பெற்றுள்ள 6 ஊராட்சித்துறைகளில் மட்டுமே அதற்கான நிர்வாக செலவு உள்ளது. ஷா ஆலம் மாநகர் மன்றம் (461,380), பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் (51 லட்சம்), சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (25 லட்சம்), காஜாங் நகராண்மை கழகம் (769,246.49), அம்பாங் ஜெயா மாநகர் மன்றம் (506,877.44), செலாயாங் நகராண்மை கழகம் (19,250) என நிர்வாக செலவுகள் பதிவாகியுள்ளது.
இச்சேவைக்கான வருவாயை விட நிர்வாக செலவு குறைவாக உள்ளதை மாநில அரசுக்கு தெரிய வந்துள்ளது. இதை மேலும் அமல்படுத்துவது குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. அதோடு, தற்போது சிலாங்கூர் மாநிலத்தில் வாகன நிறுத்துமிட கட்டணத்தை அகற்றும் பரிந்துரைகளை நாங்கள் கொண்டிருக்கவில்லை என்றும் என் யோங் ஹியான் வா குறிப்பிட்டார்.


