பாக்கு, நவ. 23 –
2017/18 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு செல்சி தகுதிப் பெற்றுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற சி பிரிவுக்கான ஆட்டத்தில் செல்சி 4 – 0 என்ற கோல்களில் அசர்பைஜானின் காராபாக் அணியை வீழ்த்தியது.

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சி பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் செல்சி, ஸ்பெயினின் அத்லேட்டிக்கோ மெட்ரிட்டை சந்திக்கவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் செல்சி , சி பிரிவில் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.
21 ஆவது நிமிடத்தில் காராபக் ஆட்டக்காரர் ரஷாட் சடிகோவுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பினால்டியை எடின் ஹாசார்ட் கோலாக்கினார்.

முதல் பாதி ஆட்டம் முடிவடைய 9 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது விலியன் இரண்டாவது கோலைப் போட்டார். 73 ஆவது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பினால்டியின் மூலம் செஸ் வப்ரீகாஸ் மூன்றாவது கோலைப் போட்ட வேளையில், விலியன் நான்காவது கோலைப் போட்டார்.


