கோலாலம்பூர், நவ.23-
இன்று அதிகாலை மணி 5.00 அளவில்
பேங்க் நெகாரா கேடிஎம் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. இதனால், கிள்ளான் பள்ளத்தாக்கு முழுமைக்குமான ரயில் சேவைகள் பாதிப்படைந்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோலாலம்பூர் ஸ்டேஷன், பேங்க் நெகாரா, புத்ரா மற்றும் சிகாம்புட் நிலையங்கள் வழியாக ரயில்சேவை இயங்காது என்றும் மாற்று வழியாக சுங்கை பூலோ, காஜாங், தேசிய காட்சியகம், பாசார் செனி ஆகியவற்றில் எம்.ஆர்.டி சேவைகளையும் சுபாங் ஜெயா எல்.ஆர்.டி. சேவைகளையும் பயணிகள் பயன்படுத்தும்படி கே.டி.எம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளது.
மொத்தம் 12 கோட்சுகளைக் கொண்ட இந்த ரயில் தடம் புரண்டுள்ள நிலையில், இதனைச் சீரமைக்க மூன்று நாள்கள் பிடிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
பத்து கேவ்ஸ் மற்றும் கே.எல் செண்ட்ரல் மார்க்கத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கென இவ்விரு பகுதிகளுக்கும் பேருந்துச் சேவை வழங்கப்பட்டுள்ளது என்று அது தெரிவித்தது. செந்தூல் ரயில் நிலையம் முன்பு நிற்கும் பேருந்துகள் மூலம் பயணிகள் கே.எல் செண்ட்ரலுக்கு வரலாம்.


