கோலாலம்பூர், ஜன.18-
ஒற்றுமையை முன்னிறுத்தி ரியா வெற்றி விளையாட்டு தலைமுறை கிளப் ஏற்பாட்டில் போசிபல் ரன் எனும் ஓட்டப்போட்டி வருகின்ற மே மாதம் 13ஆம் தேதி பாடாங் மெர்போக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

13 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 13 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 7 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் என பல பிரிவுகளில் இந்த நெடுந்தூர ஓட்டப்பட்டி நடைபெறவுள்ளது.

காலை மணி 7.00 அளவில் தொடங்கவிருக்கும் இப்போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் முதலாவது இடம் முதல் ஐந்தாம் இடம் வரையில் 500 வெள்ளி முதல் 100 வெள்ளி வரையில் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. 6ஆவது இடம் முதல் 10ஆவது இடம் வரையில் பரிசுக்கூடைகள் வழங்கப்படும். 10 கிலோமீட்டர் பிரிவில் வெற்றி பெறப்போகும் முதல் 10 போட்டியாளர்களுக்கு கிண்ணங்கள் வழங்கப்படும். இந்த நெடுந்தூர ஓட்டப்போட்டிக்கான அறிமுக விழா கடந்த வியாழக்கிழமை ம.இ.கா.வின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இக்கால சூழலில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவ்வகையில், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ள ரியா வெற்றி விளையாட்டு தலைமுறை கிளப்பைத் தாம் பாராட்டுவதாக டத்தோ சரவணன் தமதுரையில் கூறினார்.

இப்போட்டி குறித்த மேல்விவரங்களுக்கு 0135000684 / 0135000986 ஆகிய எண்களில் கணேசன் @ கனி அல்லது possiblerun@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்புக்கொள்ளலாம்.