அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > அப்துல்கலாம் வழியில் செயல்படுவேன்! -ராம்நாத் கோவிந்த்
இந்தியா/ ஈழம்

அப்துல்கலாம் வழியில் செயல்படுவேன்! -ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி, ஜூலை 25-
கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நேற்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. கடந்த வாரம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இன்று அவர் நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஹெகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி அவரது கையை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசுகையில், பாராளுமன்றத்திற்குள் இன்று நான் நுழைகையில் என்னுடைய மனதில் அதிகமான பழைய எண்ணங்கள் ஓடியது… பாராளுமன்றம் பல்வேறு விவாதங்கள், ஆலோசனைகள் மற்றும் தேசத்தை முன்னெடுத்து சென்ற இடமாகும். சில நேரங்களில் ஏற்றுக்கொண்டிருக்கலாம், மறுத்திருக்கலாம். எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். 125 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். 125 கோடி மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருந்து செயல்படுவேன். ஜனாதிபதியின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்.
ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி என முன்னாள் ஜனாதிபதிகள் காட்டிய வழியில் செயல்படுவேன். வேற்றுமைகள் பல இருந்தாலும் ஒற்றுமையாக செயல்படுவதே நம்முடைய பலமாகும். முன்னெறி செல்ல ஒற்றுமையை காட்டவேண்டும். நாம் அமைதியான தேசம், தேசம் முன்நோக்கி செல்ல நாம் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம்…  நம்முடைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றி நாம் பெருமிதம் கொள்கிறோம். உலகிற்கு இந்தியாவின் திறனை காட்டவேண்டிய நேரமாகும்.
தேசத்தின் கட்டமைப்பை அரசு மட்டும் செய்வதில்லை, ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை கட்டமைக்கிறான். இன்று பெண்களும், ஆண்களும் கடினமாக உழைக்கிறார்கள், அனைத்து நிலைகளிலும் தோளோடு தோள் கொடுத்து நிற்கிறார்கள். நாம் அனைவரையும் பெருமையடைய செய்ய நம்முடைய விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சிறப்பான கல்வியை வழங்கும் ஆசிரியர்கள், நாம் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் பாதுகாப்பு படையினரால் நாம் பெருமையடைகிறோம் என்றார்.
நம் முன்னோர்கள் சுதந்திரம் பெற்றதுடன் திருப்தி அடையவில்லை; பொருளாதாரம் மற்றும் சமூக சுதந்திரத்தை நோக்கி பயணித்தனர், நாட்டின் வளர்ச்சி சிறு கிராமங்களில் உள்ள குடிமகன்கள் வரை சென்றடைய வேண்டும் என்றார் ராம்நாத் கோவிந்த். ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன