சைபர்ஜெயா, பிப்.11-
இம்மாதம் 18ஆம் தேதி லண்டனில் ஆடையலங்கார கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், மலேசியா மற்றும் ஆசியாவை பிரதிநிதித்து உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான லிம்கோக்விங் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இது குறித்து அப்பல்கலைக்கழகத்தின் முத்திரை, படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் உதவித் தலைவர் டத்தோ டிஃபானீ மேரி லிம் கூறுகையில், இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கு ஆசியாவிலேயே லிம்கோக்விங் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே அழைப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்கு இப்பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் தேர்வு செய்திருப்பதாகவும் இக்கண்காட்சிக்கு “டேட் நைட்” எனும் கருப்பொருள் சூட்டப்பட்டிருப்பதாகவும் அண்மையில் அப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பங்கேற்பதன் தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் அவர் கூறினார்.
இந்த கண்காட்சியில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரிய உடைகள் முதலானவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமையவுள்ளது. இதற்காக, இப்பல்கலைக்கழகத்தின் வடிவமைப்பு குழுவினர் போஸ்ட்வானா, ஸ்வாசிலாந்து, கென்யா, ஈரான், இந்தோனிசியா, கம்போடியா, தாய்லாந்து, சீனா, இந்தியா மற்றும் போஸ்னியா ஆகிய நாடுகளுக்கு சென்று அங்குள்ள ஆடையலங்கார வடிவமைப்புகளைக் கண்டறிந்து வந்துள்ளன.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக லிம்கோக்விங் பல்கலைக்கழகம் தனது அனைத்துலக தரத்திலான ஆடையலங்கார தேர்வுகளை பாரிஸ், ஓசாகா, செங்டு, ஜாகார்த்தா, சிங்கப்பூர், கம்போடியா, போட்ஸ்வானா மற்றும் தீபகற்ப மலேசியாவில் நடைபெற்று வந்த கண்காட்சிகளில் இடம்பெற செய்து வந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களிடையே கல்வியின் வாயிலாக அவர்களது திறமைகளையும் ஆற்றல்களையும் லிம்கோக்விங் பல்கலைக்கழகம் மேம்படுத்தியுள்ளது. படைப்பாற்றலில் அனைத்துலக அளவில் இருக்கும் போட்டித்தன்மையில் எதிர்கால தலைமுறையினரை உருவாக்கும் பயிற்சியில் இப்பல்கலைக்கழகம் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, வேலை வாய்ப்புகள் உள்ள பட்டதாரிகளை உருவாக்குகின்றது.
மாணவர்கள் தங்களது துறைகளில் சிறந்து விளங்கவும் அவர்களது படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ஆடை வடிவமைப்பு துறையைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறனையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் அதற்கான வாய்ப்புகளை இதுப்போன்ற அனைத்துலக அளவிலான கண்காட்சிகள், போட்டிகள் வழியாக இப்பல்கலைக்கழகம் ஏற்படுத்தி தருகிறது. அதுமட்டுமின்றி, இவர்களுக்காக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இப்பல்கலைக்கழகத்தில் ஆடையலங்கார கண்காட்சி நடத்தப்படுகின்றது.
ஆகையால், லண்டனில் நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியில் லிம்கோக்விங் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பங்கேற்கவிருப்பது இப்பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இருப்பதோடு அவர்கள் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டத்தோ டிஃபானீ மேரி லிம் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட கண்காட்சியில் மாணவர்கள் அணியவிருக்கும் ஆடைகள் குறித்தும் அதிலுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டதோடு சீன பெருநாளை வரவேற்கும் வகையில் விருந்தோம்பலும் நடைபெற்றது.



