ஷா ஆலம், பிப்.11-
14ஆவது பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் சிலாங்கூர் அரசாங்கம் ஊழலிருந்து விடுபடும் உறுதிமொழியில் (ஐ.பி.ஆர்) கையெழுத்திடக்கூடும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) ஆருடம் தெரிவித்தது.
இது குறித்து அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மாட் கூறுகையில், இந்த உறுதிமொழியில் சிலாங்கூர் மட்டுமே இன்னும் கையெழுத்திடாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் இந்த உறுதிமொழியில் அவர்கள் கையெழுத்திடுவதற்கான தேதியைப் பெறுவதில் தனது தரப்பு விடாமுயற்சியுடன் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பினாங்கு, கிளந்தான் ஆகிய மாநிலங்கள் உள்பட பல மாநிலங்கள் இந்த உறுதிமொழியில் கையெழுத்திட்டு தங்களின் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. சிலாங்கூர் மட்டும் மாறுபட்டு இருப்பது ஏன்? என சூல்கிப்ளி அஹ்மாட் கேள்வியெழுப்பினார்.
வரும் பொதுத்தேர்தலுக்குள் அம்மாநிலம் இதில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கிறோம். இந்த உறுதிமொழியில் சிலாங்கூர் ஏதாவது மேம்படுத்த நினைத்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம். நிறைய கூடுதல் ஊக்குவிப்புகளை வைப்பதற்கு மாநில அரசாங்கம் கூடுதலான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கூட்டரசு விவசாய விற்பனை வாரியம் (ஃபாமா) மலேசிய மீன்ப்பிடித்துறை மேம்பாட்டு வாரியம், எஸ்.பி.ஆர்.எம். ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய சமையல் செலவுகளை மிச்சப்படுத்துவோம் எனும் நிகழ்ச்சியைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.


