கோலாலம்பூர், மார்ச் 14-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் தொகுதியில் மஇகா சார்பில் யார் களமிறக்கப்படுவார் என்ற கேள்விக்குப் பல்வேறு ஆருடங்கள் கூறப்பட்டு வந்தாலும், தற்பொழுது அத்தொகுதியில் சோதிநாதன் பெயர் அதிகமாக அடிப்படுகிறது.
அவர்தான் சுங்கை சிப்புட் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், மஇகா உறுப்பினர்கள், அரசியல் பார்வையாளர்களிடம் இது குறித்து விசாரித்தப்போது, பல அதிரடி எதிர்ப்புகளை வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் துணையமைச்சராக இருந்த டத்தோ சோதிநாதனை பலர் அறிந்து வைத்திருக்கவில்லை. மாறாக, 2009ஆம் ஆண்டு நடந்த மஇகா உயர்மட்ட தலைவர்களுக்கான கட்சி தேர்தலின் போதுதான் டத்தோ சோதிநாதனை ம.இ.கா. மட்டுமின்றி அனைத்து கட்சிக்காரர்களும் தலை நிமிர்ந்து கவனித்தார்கள்.
குறிப்பாக, அப்போதைய கட்சியின் தேசியத் தலைவராக இருந்த துன் சாமிவேலு, கட்சியின் துணை தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவை நிறுத்தினார். அவரை எதிர்த்து டான்ஸ்ரீ சுப்ரமணியம் போட்டியிட்டார். இப்போட்டியில், முன்றாவது ஆளாக களமிறங்கியவர் டத்தோ சோதிநாதன். தேர்தலிலும் அவருக்கு 3ஆவது இடமே கிடைத்தது. ஆட்டத்தில் இவர் நுழைந்ததால் பழனிவேல் வெற்றி பெற்றார். பின்னர், ம.இ.கா.விலிருந்து காணாமல் போனவர்கள் பட்டியலில் இணைந்த டத்தோ சோதிநாதனை 2013ஆம் ஆண்டு மத்திய செயலவையில் டத்தோஸ்ரீ பழனிவேல் நியமனம் செய்தார். அதன் பின்னர் கட்சி தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 712 வாக்குகள் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றார்.
ஆனால், 1 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு கட்சி தேர்தல் செல்லாது என ஆர்.ஓ.எஸ். அறிவித்தது. அதோடு 2009ஆம் ஆண்டின் மத்திய செயலவை கட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்றும் அது வலியுறுத்தியிருந்தது. 2009 ஆம் ஆண்டின் மத்திய செயலவை கட்சித் தேர்தலை நடத்தினால், உயர்மட்ட பதவிகளுக்கு டத்தோ சோதிநாதன் போட்டியிட முடியாது என்ற ஒரே காரணத்திற்காக பழனிவேல் தலைமையிலான மஇகாவினர் நீதிமன்ற கதவை தட்டினர். இறுதிவரை கதவு திறக்கவே இல்லை.
ஆர்.ஓ.எஸ் கூறியபடி கட்சித் தேர்தலை நடத்தியிருந்தால், இப்போதும் டத்தோஸ்ரீ பழனிவேல்தான் கட்சியின் தலைவராக இருந்திருப்பார். ஆனால் ஒரு சிலருக்காக அனைத்தையும் இழந்துவிட்டார். ஆனால் டத்தோ சோதிநாதன் தன்னை நம்பி இருந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு மீண்டும் ம.இ.கா.வில் இணைந்தார். அதோடு எங்களை பிரிக்கும் நடவடிக்கைகளை ஊடகங்கள் முன்னெடுக்கூடாது என அவர் கூறியதைதான் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கட்சியில் அவர் இணைந்ததை பெரும்பாலானோர் இன்றளவும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இன்று அவருக்கு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அவர்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மஇகாவில் பெரிய உட்பூசல் நடந்து கட்சி இரண்டாக உடைந்ததற்கு சோதிநாதன் முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர். கட்சியை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்று கட்சியின் மாண்பிற்கு மிகப்பெரிய கேடு விளைவித்தவர். கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் அணியில் இருந்து கட்சிக்கு எதிராகவும் நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்திற்கு எதிராகவும் மும்முரமாகச் செயல்பட்டவர்.
பின்னாளில், பிரதமரின் ஆதரவில் டத்தோஸ்ரீ சுப்ராவின் தலைமைத்துவத்தில் கட்சி சிறப்பாகச் செயல்படத் தொடங்கியதும், தனது சுய அரசியல் லாபத்திற்காக பழைய அணியில் இருந்து விலகி, கட்சியில் இணைந்தார். அப்பொழுதே அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டதற்காக கட்சியின் பல்வேறு தரப்பினர் முகம் சுழித்தாலும், கட்சியின் ஒற்றுமை கருதி மௌனம் காத்தனர். இப்பொழுது சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு அவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற செய்தியை அடுத்து, சோதிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக கட்சியின் மேலிடத்திலும் சிலர் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்திருப்பதாகத் தெரிய வருகிறது.
இதற்கிடையில், உள்ளூரைச் சேர்ந்த ஒருவர்தான் இத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரஸ் வெகுநாட்களாக வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த சோதிநாதனுக்கு சுங்கை சிப்புட் தொகுதி மஇகா ஆதரவு கொடுப்பார்களா? தேர்தல் நேரத்தில் அவருக்காக இறங்கி வேலை செய்வார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அப்படியே தொகுதி காங்கிரஸ் ஆதரவு வழங்கினாலும், டத்தோ சோதிநாதன் யாரென்றே அறிந்திராத சுங்கை சிப்புட் மக்கள் அவருக்கு ஆதரவளிப்பார்களா என்பது சந்தேகம்தான். இந்நிலை நீடித்தால் சுங்கை சிப்புட் தொகுதியை மஇகா மீண்டும் எதிர்க்கட்சியிடம் இழக்கும் என்பது உறுதி.


