கோலாலம்பூர், ஏப்.7 –

நாட்டின் ஆறாவது பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு 11 என்ற எண் மிகவும் பிடித்த எண் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்ககூடும். 13 ஆவது நாடாளுமன்றம் சனிக்கிழமை கலைக்கப்படும் என பிரதமர் அறிவித்தபோது ஏன் பிரதமர் அந்த அறிவிப்பை வெளியிட்ட 6 ஆம் தேதியை தேர்தெடுக்கவில்லை என பலரின் மனதில் கேள்வி எழுந்தது. ஆனால் நஜிப் தனக்கு பிடித்த அந்த 11 எண் வரும்படி ஏழாம் தேதியை அறிவித்திருக்கிறார்.

ஏப்ரல் மாதத்தில் ஏழாம் தேதி எனும் பட்சத்தில், 7 ஆம் தேதியை ஏப்ரல் மாதத்தின் நான்காம் எண்ணுடன் கூட்டினால் 11 என்ற எண் வருகிறது. இதனையடுத்து 14 ஆவது பொதுத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறலாம் என பலர் ஆருடம் கூற தொடங்கி விட்டனர். காரணம் 2 -ஐ 9-உடன் கூட்டினால் 11 தானே கிடைக்கும்.

அதேவேளையில் மே மாதத்தின் 6 ஆம் தேதியையும் நாம் ஒதுக்கி விட முடியாது. ஏனெனில் 6 ஆம் தேதியை ஐந்தாவது எண்ணுடன் கூட்டினால் 11 தானே கிடைக்கிறது. இது அநேகனின் கருத்தாகும். இருப்பினும் தேர்தல் தேதியை முடிவு செய்யப் போவது என்னவோ தேர்தல் ஆணையம் தான்.

11 என்ற எண் ஏன் தமக்கு பிடிக்கும் என நஜிப் இதற்கு முன் காரணம் கூறியுள்ளார். அவரின் தந்தை, முன்னாள் பிரதமரான துன் அப்துல் ரசாக், 1922 ஆம் ஆண்டில் மார்ச் 11 ஆம் தேதி பிறந்தார். அதேவேளையில் அவரின் தாயார், துன் ரஹா நோவா 1933 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் தேதி பிறந்தார். நஜிப்பின் மூத்த மகன் நவம்பர் மாதம் (11) பிறந்தார். அதேவேளையில் அம்னோ 1946 ஆம் ஆண்டில் மே 11 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.

பகாங் மாநிலத்தின் 11 ஆவது மந்திரி பெசாராக நஜிப் பொறுப்பு வகித்துள்ளார். அதேவேளையில் பிரதமர் பயன்படுத்தும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ வாகன எண் 11 என்பது குறிப்பிடதக்கது.